ஞாயிறு, டிசம்பர் 31, 2006

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு!

சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.

அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.

'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'

- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...

'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'

'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'

'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'

'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'

'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'

'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'

'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'

'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'

'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...

அதுதான்...

ஆம்...

அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.

காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'

சனி, டிசம்பர் 09, 2006

அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.

வலியுரை - காசி ஆனந்தன்


. . . . . .
பள்ளிக்குப் போன தர்ஷினி சிங்கள
வெறியர்களால் கடத்திக் கொலை
செய்யப்பட்ட பழைய நிகழ்ச்சி நெஞ்சை
மிதிக்கும்.

பொடிச்சி வருவாளா?

வலி

.......
படகு கிழியும்.

கடல் அலையின் பேரிரைச்சலை விழுங்கும்
கதறல்.

தமிழீழ உறவுகளின் உடல்கள் கடலில்
புதைக்கப்படும்

வலி

தமிழீழம் இந்த வலிகளின் இடையேதான்
விடுதலை நெருப்பில் தடம் பதிக்கிறது.

''வலி'' சுமந்து அறிவுமதி இந்நூலில் வருகிறார்.

எதைப்பற்றிய படைப்பானாலும் தமிழின்
உச்சத்தைத்த தொடுவது அறிவுமதி இலக்கியம்

அறிவுமதியின் ''வலி''யும் அப்படித்தான்.

செவ்வாய், டிசம்பர் 05, 2006

வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல

உயிருரை - சீமான்

இந்த வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல; அண்ணன் அறிவுமதிக்கான வலிகள் மட்டுமல்ல; அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

என்று அண்ணன் அறிவுமதி எழுதியிருக்கிறார். நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும்

ஒரு நாடு வேண்டுமல்லவா?
**********************
96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்

திங்கள், டிசம்பர் 04, 2006

அண்ணன் அறிவுமதிக்கான வலிகள்

நெகிழ்வுரை - இரா. நல்லகண்ணு

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .

உலகில் பல்வேறு நாடுகளில் ஆளும் பாசிச சக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், தப்பிப் பிழைத்து வாழத்துடிக்கிறார்கள். பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போய் உயிர் வாழலாமென்று நினைத்து புலம்பெயர்ந்து செல்கிறார்கள். இவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். உலகெங்கும் அகதிகள் பிரைச்சனையும் குடிமக்களின் பிரைச்சனையாகக் கருதப்பட வேண்டுமென்று உலக மனித உரிமை அமைப்புகளும், செஞ்சிலுவைச்சங்கமும் அங்கீகரித்துள்ளன.

அதில் நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. திபத்திலிருந்து வெளியேறி வந்த புத்த பிட்சு தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டின் மரியாதைக்குரிய அகதிகளாக ராஜோபசாரத்துடன் நடத்தப்படுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள்.

இலங்கை இனப்பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வருகிறது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

19ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வேலையாட்களாக இந்தியாவில்லிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மலைகளில் தேயிலைத் தோட்டம் போட்டுக்கொடுத்தார்கள். நாடுகள் விடுதலை பெற்றதும் நாட்டைப் பண்படுத்திக் கொடுத்த இந்தியத் தமிழர்களை இலங்கை அரசு விரட்டியது. நாடற்ற தமிழர்களாகக் கருதப்பட்டார்கள். சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் நடந்தது. பல்லாயிரம் பேர் இந்தியாவில் தமிழகத்துக்கு வந்துநிரந்தர அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாக்குரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக் குடிகள், அத்தீவின் பெருமைக்குரியவர்கள் மட்டுமல்ல; தமிழுக்கும் பலவகையில் பெருமை சேர்த்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள் மகாகவி பாரதிக்கு விழா எடுக்கவேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஆறுமுக நாவலர், கனகசபைப் பிள்ளை, ந.சி. கந்தையா இலக்கியத்தில் புதிய பார்வையைக் கொடுத்த பேராசிரியர்கள்; கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞ்ஞர்கள் அரும்பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் எழுத்திலக்கிய முன்னவர்கள்.

இத்தகைய பெருமை சார்ந்த மக்களின் வாரிசுகளான ஈழத்தமிழ் மக்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்

நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.

இது கடல் கடந்து வந்தவர்களின் முதல் சோகம்.

அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்

வலிக்கவில்லை

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது

இது இரண்டாவது சோகம்.

தமிழ் அகதிகள் வாழும் இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, நெஞ்சை உலுக்குகிறது.

நேற்று வரை
சேலைகள்
இன்று முதல்
சுவர்கள்

காதவழி தூரத்தில் உள்ளது யாழ்ப்பாணக்கரை. தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போன நமது மனசாட்சியை உலுக்குகிறார் கவிஞர் அறிவுமதி.

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறோம்

உயிர் பிழைக்க
கடல் தாண்டி

வருகிறீர்கள்
- - - - - - - - -

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

இரு கவிதைகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பிஜித் தீவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப்பெண்கள் பட்ட துயரை மகாகவி பாரதி 1916 இல் பாடினார்.

நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினில் போயதைக்
காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி
யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே
என்று.

இன்று 2006 இல் ஈழத்தமிழ் அகதிகளின் துயரத்தைச் சாரமாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. இன்னும் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு வழிகள் காண இக்கவிதைத் தொகுப்பு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.

96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்

திங்கள், நவம்பர் 20, 2006

நல்ல சூழல் மலரும்

இலட்சியக்கவி அறிவுமதி அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்... இனி

அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?
அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது.அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்;கு மட்டும் ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்;து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.

கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?
என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும் இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்;த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.

உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..
முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.

உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள் பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன?
தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...
தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும்.

இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது?
தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்;டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.

புதன், நவம்பர் 15, 2006

அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்

அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்
தனித்தன்மைமிக்க ஆளுமை
அறிவுமதி.

இனியத் தமிழ்க் கற்ற எளியோரையும்
கவிதையில் வல்லவராக்கும் அற்புதம்
அறிவுமதி.

அவரின் வரிகள்
செந்தமிழுக்கு
கூடுதல் செழுமை.

சுpல ஆண்டுகளுக்கு முன்
துபாய் வருகை தந்த
இலட்சியக் கவி அறிவுமதி அவர்கள் எழுதிய கவிதை நண்பர்கள்…
!!!!

கொற்றவைச் செல்வி
- அறிவுமதி.
ஆதி
முலைத்
தொடர்ச்சி
அழகு
தமிழ்க்
கவுச்சி

தொன்மத்
தேன்
குடுக்கைத்
தூக்கிச் சுமந்து வரும்
இசைக்
குறத்தி.

கருவறைக்குள்
கொழுத்த
மழை காய்ச்சும்
செயல்
மறத்தி

கொடுவேல் முனைகளில்
வெற்றிகள்
ஒழுக விடும்
கொற்றவைச்
செல்வி

நெருப்புத் துண்டுகளில்
நிணமுருகத்
தணல்
வளர்க்கும்
அழுத்தக்
கள்ளி

திமிறிப்
பகையெரிக்கும்
உறும
நெருப்பு

குடைந்து குடைந்து
கூரிய
அறிவில்
குறிக்கோள்
முடிக்கும்
கொடுந்தவப்
பொறுப்பு

வேரிறங்கி
வெறி
குடித்துக்
கிளை நெடுக
மொட்டுடைக்கும்
உதடுகள்
திறக்கா
உண்மை

பெரும்பகை மிரட்டலைத்
துரும்பென
உதறிக்
குறுநகை
புரியும்
நடுங்குதலற்ற
நன்மை

நல்லன முடிக்கும்
வல்லின
மென்மை

நற நற நறவென
கடைவாய்
உரச
வன்மம்
உழக்கும்
வாய்மை

தொட்ட செயல்களில்
துல்லிய
முடிவுகள்
கண்டு
சிரிக்கும்
தூய்மை

காயங்கள் தோறும்
பகடிகள்
கொட்டி
வலிகள்
வாங்கித்
தனிமையில்
கசியும்
தாய்மை

எம்
நம்பிக்கைகளின்
நம்பிக்கை

காட்டுக்குள்
தூளி
கட்டி
நாட்டுக்குத்
தாலாட்டுப்
பாடும்
அம்மா!
மழை
அம்மா!

வெள்ளி, நவம்பர் 03, 2006

அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி

அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி

இது எங்க சாமி - அறிவுமதி

குலதெய்வம் - வீரனார்

‘வெள்ள குதிரக்காரன்
விரல் ரெண்ட தட்டி வர்றான்
வேல்கம்பு வீரனாரு
பகையறுக்க பாஞ்சு வர்றான்’
னு எங்க அத்தை ஆங்காரமாப் பாடினா, நெஞ்சுக்குள்ள நெருப்பெரியும்!

அந்தக் குரலில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, கூலிகளா முதுகொடிஞ்சு கிடக்கிற எம்மக்களோட மொத்த கோவமும் முறுக்கேறி ஒலிக்கும். வீரனாரு இந்த மண்ணோட சொந்தக் காரன். கழுத்துல புலிநகத்தையும் மனசுல காட்டுமல்லி வாசத்தையும் சூடிக்கிட்டு அலைஞ்ச எங்க ஆதிப்பாட் டன். இப்பவும் காட்டுக்குள்ளேதான் இருக்கான். மணிமுத்தாறு கரையோரம் அழிஞ்சி மரத்தடியில் இருக்கிற அவனுக்குக் கோயிலுமில்லை, கூரையுமில்லை. கதிர்காலத்துல கூட்டம் கூட்டமா வர்ற குருவிங்க, கொத்திப் போன சோளத்தை அவன் தலையில உட்கார்ந்து சாப்பிடும். இயற்கையும் வீரமும் செழிச்சுக்கிடந்த தமிழ்க்குலத்தின் மூத்த குடிதான் இந்த வீரனாரு’’ கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி சகிதம் கம்பீரமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.

விருத்தாசலம் அருகே அவரது தாய்க் கிராமமான சு.கீணனூரில் இருக் கிறார் வீரனார். மழையால் மூங்கில் காடுகள் பச்சை பூத்துக்கிடக்க, முணு முணுத்தபடி நடக்கிறது மணிமுத்தா நதி. ஊர் மக்கள் சூழ காட்டுப் பாதையில் நடக்கிறார் அறிவுமதி.


‘‘இப்பெல்லாம் ஆத்துல இடுப்பு வரைக்கும் தண்ணியைப் பாக்கறதே அதிசயமா இருக்கு. என்னோட சின்ன வயசுல கரை கட்டி சுழிச்சுக்கிட்டு ஓடும். ஆத்துல தண்ணி வரும்போது சரியா காட்டுல மல்லியோட காலமும் ஆரம்பிக்கும். அப்படியே மண் வாசமும் மல்லி வாசமுமா நிறைஞ்சு கிடக்கும் ஊர். காலை யிலயும் சாயங்காலமும், கை நிறைய மல்லிப்பூவை பறிச்சுக்கிட்டு போய் வீரனார் தலையில கொட்டு வோம். பொண்ணுங்க பாவாடை நிறைய அள்ளிக்கிட்டு வந்து கொட்டு வாங்க. அது ஒரு போட்டி மாதிரி நடக்கும். முறுக்கு மீசை முரட்டு வீரனாரை மல்லிப்பூவாலயே மொத்தமா மூடிடுவோம். எங்க செல்லப்பாட்டன் தானே அவன்!’’ சிரிக்கிறார் அறிவுமதி.

காட்டு நாரத்தை மரங்கள் சூழ, அழிஞ்சி மரத்தடியில் பாசி படர்ந்த கற்சிலை யாக உட்கார்ந்திருக்கிறார் வீரனார். பக்கத்திலேயே காட்டுக் குறத்தியும் ரசபத்திரனும். சுற்றிலும் முறைக்கின்றன வேல் கம்புகள்.


‘‘நூறு நூறு ஆண்டுகளா இயற்கையோட மடியில தான் இருக்கான் என் பாட்டன். மலர்களின் மகரந்த சேர்க்கைகளை யும், கூட்டுப்புழுக்கள் பட்டாம் பூச்சிகளாகிப் பறப்பதையும் பார்த்தபடியே உட்கார்ந்திருக்கான் இயற்கையின் பெருங் காதலன். பெரிய வீரன். வெயிலென்றும் மழை என்றும் பாராமல் வேல் கம்போடு ஒரு வெள்ளைக் குதிரையில் சுற்றிவந்து ஊரைக் காவல் காத்தவன். இந்த ஆத்தங்கரையில் தங்கியிருந்த அவனை மீறி ஊருக்குள் ஒரு ஈ காக்கையும் நுழைய முடியாதாம்.

ஒருமுறை வெள்ளைக்கார துரை ஒருவர் ஆற்றைக் கடந்து ஊருக்குள் நுழையப் பார்த்தாராம். வீரனாரைப் பார்த்தும்கூட குதிரையில் இருந்து இறங்காம ஊருக்குள் நுழைய முயல, அங்கேயே ஆத்தங்கரையில் வேல் கம்பால் அவரைக் குத்தித் தூக்கிப் போட்டுட்டாராம் வீரனார். இன்னொரு முறை ஊர் மக்களை வலுக்கட் டாயமா அடிமை வேலைக்கு இழுத்துட்டுப்போன ரசபத்திரனையும் இதே ஆத்தங்கரையில் வெச்சுக் கதையை முடிச்சாராம் வீரனார். ரசபத்திரனோட கடைசி ஆசைக்காக, அவனுக்கும் இங்கே ஒரு சிலை வெச்சாங்களாம்.
ஒரு முறை ஊருக்குள் வெள்ளம் வந்தப்போ, தனியாளா மடையடைக்க இறங்கின வீரனார், அந்த வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப்போனதா சொல்வாங்க. இப்படி வீரனாரைப் பற்றி ஏராள மான கதைகள் என் ஆத்தாக்களின் சுருக்குப் பைகளில் இன்னும் இருக்கு. களத்தில் இறந்துபட்ட மாவீரருக்கு நடுகல் நட்டு வழிபடுவது தமிழர் மரபு. அப்படியோர் நடுகல் நாயகன்தான் வீரனார்! இதைத் தவிர வேறு எந்த கடவுள் மரபும் எங்களுக்கு இல்லை’’ என்கிறார் அறிவுமதி.

‘‘வீரனாருக்கு தினப்படி பூசை, திருவிழா எல்லாம் இல்லை. தோதுப்பட்ட நேரத்துல யாரு வேணும்னாலும் வந்து கும்பிட்டுக்கலாம். ஊர்ல வயல்ல விளையற முதல் தானியத்தை வீரனாருக் குப் படைக்கிறது வழக்கம். அதேமாதிரி வீரனாரு கொடைக்குக் கீழே இருக்கிறவங்க அத்தனைபேரும் மொட்டை போடறது, காதுகுத்து எல்லாம் இங்கதான் வெச்சுப்பாங்க. ஆடு, கோழி, பன்னி மூணும் பலியிடறது வழக்கம். கூடவே சாராயம், சுருட்டு, கள்ளு எல்லாம் உண்டு. நம்மளை மாதிரியே மூக்கு முட்ட கவுச்சி சாப்பிடற ஆளுதான் வீரனாரு’’ என்று சிரிக்கிறார் ஒரு பெரியவர்.
‘‘என்னைப் பொறுத்தவரை வீரனார் தெய்வ மில்லை. என் மூத்த போராளி. இந்த பூசை, படையல் எல்லாமே நன்றி செலுத்துதலின் அடிப்படையில் வந்தவைதான். பிற்காலத்தில் இவற்றில் படர்ந்துவிட்ட மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் இனக்குழுவின் வீரமரபின் அடையாளமாகத்தான் வீரனாரை நான் பார்க்கிறேன்.

‘பஞ்ச மக்க பசியாற
கஞ்சியில்ல வெஞ்சனமில்ல
நஞ்சி நாம நின்னாலும்
சொந்தமா துண்டு நெலமில்ல.
அஞ்சுகமே தூங்கய்யா
இப்ப ஆத்தா மாரில் பாலில்ல...’
என்கிற என் தாய்க் கிழவிகளின் பாட்டு இன்னும் இதே காத்துல அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கு. என் மக்களின் வறுமையும் அடிமைத்தனமும் முழு தாகப் போகவில்லை. பண்பாட்டு தளத்திலும் கலாசார தடத்திலும் தமிழினம் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதையெல் லாம் எதிர்க்க நமக்கு வழிகாட்டும் வடிவமாகத் தான் முருகனையும், வீரனாரையும் பார்க்கிறேன். அவர்கள் கையில் இருந்த வேல்கம்புதான் இப்போது என் கையில் எழுதுகோலாக இருக்கிறது.

எங்கள் பாட்டனார்கள் எதிரிகளிடம் அரிவாளால் பேசினார்கள். இப்போது பேரன்கள் நாங்கள் பெரியார், அம்பேத்கர் தந்த அறிவால் பேசுகிறோம். எங்கள் தொன்மத்தின் வேர்தான் வீரனார். அதிலிருந்து முளைத்துக் கிளை பரப்பி, இன்று உலகம் முழுதும் பூத்து காய்த்துக் கொண்டிருக்கிறார்கள் எம் தமிழர்கள்!’’-அறிவுமதி பேசப் பேச, ஊரே அதிசயமாகப் பார்க்கிறது.

‘ஏ ராசா’ என ஒரு ஆத்தா கன்னம் தடவி நெட்டி முறிக்கிறார். அந்திசாய, அங்கிருந்து கிளம்புகிறோம். எல்லோரிடமும் விடை பெற்று ஊர் எல்லையை அடைய, அங்குள்ள வெட்டவெளியில் உள்ள பிரமாண்ட சிலைகளுக்கு நடுவே ஒரு கூட்டம் கூடி யிருக்கிறது. அவர்களோடு சேர்ந்துகொள்கிறார் அறிவுமதி.

‘‘இங்கே சிலையா நிக்கறதும் வீரனார்தான். அங்கே இருக்கறது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களோட வீரனார். இது தாழ்த்தப்பட்டவங்களோடது. பாருங்க... சாதி, வீரனாரையும் விட்டு வைக்கலை.

என்னோட சின்ன வயசுல ஆத்துல வெள்ளம் வந்தா ஊரே தீவாக மாறிவிடும். உலகத்தோடு ஊரின் உறவே துண்டிக்கப்பட்டுவிடும். வெள்ளம் வடிஞ்சதும் இளைஞர்களெல்லாம் சேர்ந்து, துவைக்கிற கல்லை தேடியெடுத்து படித்துறையில கொண்டுபோய் வைப்பாங்க. நாங்களெல்லாம் வீரனாரைத் தேடுவோம். தலை தனியா, கை காலெல்லாம் தனித் தனியா மணல்ல புதைஞ்சு கிடக்கிற எங்க பாட்டனாரைத் தேடி எடுத்து ஒண்ணா சேர்த்து வைப்போம்.

இப்பவும் சாதீயம்ங்கற வெள்ளம் அடிச்சு, வீரனார் பிரிந்துதான் கிடக்கிறார். இந்த இரண்டு வீரனாரையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது தான் என் கனவும் லட்சியமும். என் லட்சியம் நிச்சயம் நிறை வேறும்!’’


தன் பாட்டனாரைப் பார்த்தபடி அத்தனை உறுதியாக அறிவுமதி சொல்ல, கூடி நிற்கும் கூட்டத்தினரின் கண்களில் சின்னதாய் தீப ஒளி!

ராஜுமுருகன்
படங்கள்: கே.கார்த்திகேயன்

நன்றி
ஆன்ந்த விகடன்

சனி, ஜனவரி 07, 2006

நட்புக்காலம்

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் -

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?

***

கவிதை தேர்வு: நண்பன்

கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்

***

கவிதை தேர்வு - நண்பன்.

இரண்டு ஊதுபத்தி - புகையின் அசைவில் நீ - நான்.

எத்தனை அலாதியான கற்பனை. கற்பனை தானா? ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா? அசைந்து அசைந்து கிளம்பும் புகையின் மௌனங்களுக்கிடையே ஊதுபத்தியாய் கரைந்து கொண்டிருக்கும் நீயும் நானும்... நம்மிடமிருந்து கிளம்பும் அந்த புகை மண்டலம் ஒன்றுடன் ஒன்று கலந்து யாரிடமிருந்து, எந்த இடத்திலிருந்து, எந்தப் புகை என்று பிரிக்க இயலாத கலவையாய் ஆகிப் போன நீயும் நானும் - என்று வரும் இந்த கலக்கும் நாள்?

ஏக்கமாக இருக்கிறது...

ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்