செவ்வாய், டிசம்பர் 09, 2008

வேர் நனைப்போம்!

வேர் நனைப்போம்!

- அறிவுமதி

எதையும் செய்து பிழைக்கலாம்
இழிவைத்
தமிழில்
விதைக்கலாம்
என்றே
துணிந்த
திமிரிலே
எத்தனை
எத்தனைத்
தொலைக்
காட்சி!
எல்லாம்..
எல்லாம்..
அன்னைத் தமிழைக்
கொன்று
முடிக்க
அவாள்கள்
கண்ட
கதிர் வீச்சு!

தமிழர் இல்லா
தொலைக்
காட்சி!
தமிழருக்கான
தொலைக்
காட்சி!

தமிழே
இல்லா
தொலைக்
காட்சி!
தமிழகத்தின்
இழிவாச்சு!
இழிவைத் துடைக்க
உருவச்சு...
எழிலாய்
‘மக்கள்
தொலைக்
காட்சி.!

மருத்துவர் கண்ட
தொலைக்
காட்சி!
தமிழ்
மருத்துவம்
பார்க்கும்
தொலைக்
காட்சி!

மக்கள் நலனே
அதன்
மூச்சு!
மானத்
தமிழே
பயிராச்சு!

முத்தமிழ் வளர்க்கும்
தொலைக்
காட்சி!
மூன்று
ஆண்டுகள்
வயசாச்சு!
தத்தித் தவழும்
வயதினிலும்
தடுமாறாத
செயலாச்சு!

இது
தொடர்ந்து
நடக்க
தோள்
கொடுப்போம்!

இது
படர்ந்து
செழிக்க
வேர்
நனைப்போம்!

வெள்ளி, ஏப்ரல் 11, 2008

அன்புள்ள ஞாநிக்கு…

அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.

அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…

நான்..பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

நன்றி ஞாநி..

எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!

சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008

புதன், ஏப்ரல் 02, 2008

நீரோட்ட‌ம்!

----அறிவும‌தி----

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

செம்மொழி‍ - காரணப் பெயர்

----அறிவும‌தி----


செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

பிழைக்கும் வழி

-----அறிவும‌தி-----

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!


புதன், ஜனவரி 23, 2008

73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது.
சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம்.

'உள்ளேன் ஐயா' என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில்.



''கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்து போய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம் தான். ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போனார். குளிப் பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்து போய் காவிரிக் கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!'' என்கிறார் இயக்குநர் சீமான்.

''பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றி வைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'நெருப்புப் பார்வைகள்' புத்த கத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடை களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என எல்லாமே அவர்தான். ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டு மல்ல, ஊரிலிருந்து கிளம்பிவரு கிற யாரோ ஒரு முகம் தெரியா தமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப் போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வரு வார். நான் 'புதிய மன்னர்கள்' படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, 'எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது' என்று சுந்தர்.சி தந்ததுதான் 'உள்ளத்தை அள்ளித் தா'. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்தான்!'' என்கிறார் பழநிபாரதி.

''கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டதும், ஆறு வருடம் என்னைத் தங்கவைத்துப் பாது காத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குதான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்'' என்கிறார் தபூசங்கர்.

''சினிமாவில் உதவி இயக்கு நராகச் சேர வேண்டும் என்கிற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசை திருப்பி யது அண்ணன். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'பட்டாம் பூச்சி விற்பவன்' புத்தகத்தை, அண்ணன் தன் 'சாரல் வெளியீடு' மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட் டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. 'என்னைச் சந்திக்க கனவில் வராதே' என்ற ஜப்பானியக் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, 'சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை' என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்'' என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.

இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, 'இனி திரைப்படங்களில் பாடல் கள் எழுத மாட்டேன்' என அறிவித்து விட்டார்.


'''உள்ளேன் ஐயா' என்ற படத்துக்காகத் தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதை களைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்த கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன்.

சுந்தர்.சி., சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பி களில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஒரு இயக்குநராக வெற்றியடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல் கள் எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தை களை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்குவதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டு வரும் வித்தையைக் கற்றவன்.

பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத் தினார். அப்போது பாலாவும் பொன் வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந் தார்கள். 'வீடு' படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, 'வீடு' படப்பிடிப்புக்கு அழைத் துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணி யாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, 'இன்னொரு உதவியாளர் வேண் டும். யாராவது இருக்கிறார்களா?' என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். 'யாரிடம் பணி யாற்றியிருக்கிறான்?' என்றார். 'உங்களிடம்தான். உங்களுக்குத் தெரியாமலேயே!' என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். 'சேது' கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே என்னை அழவைத்தவன் பாலா.

அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்கவைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.

சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனைப் பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக் கும்போது பெருமிதமாக இருக்கிறது'' என்கிறார் கவிஞர் அறிவுமதி.

கலை வளர்க்கும் கம்பீரத் தோடு நிற்கிறது 73ம் எண் கட்டடம்!


நன்றி: ஆனந்த விகடன்