புதன், ஜனவரி 23, 2008

73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது.
சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம்.

'உள்ளேன் ஐயா' என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில்.



''கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்து போய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம் தான். ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போனார். குளிப் பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்து போய் காவிரிக் கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!'' என்கிறார் இயக்குநர் சீமான்.

''பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றி வைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'நெருப்புப் பார்வைகள்' புத்த கத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடை களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என எல்லாமே அவர்தான். ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டு மல்ல, ஊரிலிருந்து கிளம்பிவரு கிற யாரோ ஒரு முகம் தெரியா தமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப் போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வரு வார். நான் 'புதிய மன்னர்கள்' படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, 'எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது' என்று சுந்தர்.சி தந்ததுதான் 'உள்ளத்தை அள்ளித் தா'. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்தான்!'' என்கிறார் பழநிபாரதி.

''கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டதும், ஆறு வருடம் என்னைத் தங்கவைத்துப் பாது காத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குதான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்'' என்கிறார் தபூசங்கர்.

''சினிமாவில் உதவி இயக்கு நராகச் சேர வேண்டும் என்கிற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசை திருப்பி யது அண்ணன். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'பட்டாம் பூச்சி விற்பவன்' புத்தகத்தை, அண்ணன் தன் 'சாரல் வெளியீடு' மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட் டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. 'என்னைச் சந்திக்க கனவில் வராதே' என்ற ஜப்பானியக் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, 'சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை' என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்'' என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.

இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, 'இனி திரைப்படங்களில் பாடல் கள் எழுத மாட்டேன்' என அறிவித்து விட்டார்.


'''உள்ளேன் ஐயா' என்ற படத்துக்காகத் தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதை களைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்த கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன்.

சுந்தர்.சி., சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பி களில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஒரு இயக்குநராக வெற்றியடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல் கள் எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தை களை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்குவதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டு வரும் வித்தையைக் கற்றவன்.

பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத் தினார். அப்போது பாலாவும் பொன் வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந் தார்கள். 'வீடு' படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, 'வீடு' படப்பிடிப்புக்கு அழைத் துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணி யாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, 'இன்னொரு உதவியாளர் வேண் டும். யாராவது இருக்கிறார்களா?' என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். 'யாரிடம் பணி யாற்றியிருக்கிறான்?' என்றார். 'உங்களிடம்தான். உங்களுக்குத் தெரியாமலேயே!' என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். 'சேது' கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே என்னை அழவைத்தவன் பாலா.

அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்கவைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.

சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனைப் பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக் கும்போது பெருமிதமாக இருக்கிறது'' என்கிறார் கவிஞர் அறிவுமதி.

கலை வளர்க்கும் கம்பீரத் தோடு நிற்கிறது 73ம் எண் கட்டடம்!


நன்றி: ஆனந்த விகடன்