புதன், நவம்பர் 15, 2006

அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்

அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்
தனித்தன்மைமிக்க ஆளுமை
அறிவுமதி.

இனியத் தமிழ்க் கற்ற எளியோரையும்
கவிதையில் வல்லவராக்கும் அற்புதம்
அறிவுமதி.

அவரின் வரிகள்
செந்தமிழுக்கு
கூடுதல் செழுமை.

சுpல ஆண்டுகளுக்கு முன்
துபாய் வருகை தந்த
இலட்சியக் கவி அறிவுமதி அவர்கள் எழுதிய கவிதை நண்பர்கள்…
!!!!

கொற்றவைச் செல்வி
- அறிவுமதி.
ஆதி
முலைத்
தொடர்ச்சி
அழகு
தமிழ்க்
கவுச்சி

தொன்மத்
தேன்
குடுக்கைத்
தூக்கிச் சுமந்து வரும்
இசைக்
குறத்தி.

கருவறைக்குள்
கொழுத்த
மழை காய்ச்சும்
செயல்
மறத்தி

கொடுவேல் முனைகளில்
வெற்றிகள்
ஒழுக விடும்
கொற்றவைச்
செல்வி

நெருப்புத் துண்டுகளில்
நிணமுருகத்
தணல்
வளர்க்கும்
அழுத்தக்
கள்ளி

திமிறிப்
பகையெரிக்கும்
உறும
நெருப்பு

குடைந்து குடைந்து
கூரிய
அறிவில்
குறிக்கோள்
முடிக்கும்
கொடுந்தவப்
பொறுப்பு

வேரிறங்கி
வெறி
குடித்துக்
கிளை நெடுக
மொட்டுடைக்கும்
உதடுகள்
திறக்கா
உண்மை

பெரும்பகை மிரட்டலைத்
துரும்பென
உதறிக்
குறுநகை
புரியும்
நடுங்குதலற்ற
நன்மை

நல்லன முடிக்கும்
வல்லின
மென்மை

நற நற நறவென
கடைவாய்
உரச
வன்மம்
உழக்கும்
வாய்மை

தொட்ட செயல்களில்
துல்லிய
முடிவுகள்
கண்டு
சிரிக்கும்
தூய்மை

காயங்கள் தோறும்
பகடிகள்
கொட்டி
வலிகள்
வாங்கித்
தனிமையில்
கசியும்
தாய்மை

எம்
நம்பிக்கைகளின்
நம்பிக்கை

காட்டுக்குள்
தூளி
கட்டி
நாட்டுக்குத்
தாலாட்டுப்
பாடும்
அம்மா!
மழை
அம்மா!

கருத்துகள் இல்லை: