வெள்ளி, மார்ச் 16, 2007

‘வலி’ தருகின்ற வலி

‘வலி’ தருகின்ற வலி

வே. இராமசாமி

ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை / அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து கொண்டிருக்கும் கையில் மீன்தானே கிடைக்க வேண்டும். கண் எங்கிருந்து வந்தது? அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது? இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது.

‘தண்புனல் பரந்த மண்மறுத்துமீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம்.

படகில் / ஏறினோம் / படகுகளை / விற்று / இங்கே / வீடு / கிடைப்பதற்குள் / அங்கே / நாடு / கிடைத்துவிடும் / இராமேசு வரத்தில் / எல்லோரும் / குளித்துக் / கரையேறுகிறார்கள் / நாங்கள் / குதித்துக் / கரையேறுகிறோம். இந்தக் கவிதை வரிக ளெல்லாம் தமிழ் நெஞ்சங்களில் கணுக்கணுவாய் தெறிக்கின்றன. தாய்த்தமிழகம் தங்கள் சகோதரர்களை வரவேற்கும் லட்சணம் தெரிகிறது. வாடகைக்கு வீடு கேட்டதற்கு வீடு தராவிட்டாலும் பரவாயில்லை காவல் துறையைக் கூட்டி வந்து காட்டிக் கொடுக்கிற நவீனத் தமிழர்களின் முகத்தில் அறைகிறது. இங்கு அகதியாக வந்தவர்கள் படுகின்ற அவதிகளை இந்த நூல் முழுவதும் வேதனை பொங்கப் பதிவு செய்கிறார் அறிவுமதி. மேலும் வெறும் ஊமைச் சாட்சியாக - கையறு நிலையாக இந்தக் கவிதைகள் முடியும் போது சொந்த நாட்டில் - சொந்த வீட்டில் நாமும் அகதிகளாக ஆக்கப்பட்டோமோ என்றும் தோன்றுகிறது.

தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது? இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும்.

முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும்.

தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா? என்கிற இயக்குநர் சீமானின் உயிருரை யோடும் எங்கள் தாய்க் கவிஞனின் வலியை முன்மொழிகிற பழநிபாரதியின் பின்னுரையோடும் வந்துள்ள இந்த நூல் தமிழர்கள் அனைவரின் நெஞ்சிலும் நிகழ்கால வரலாற்று வலியைப் பிரதிபலிக்கும் முகமாக அமைந்துள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் முகாமை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கிறது.


வலி
ஆசிரியர் : அறிவுமதி, வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17,விலை : ரூ. 70.00