செவ்வாய், ஜூன் 07, 2011

அது ஒரு மீன் காலம் !


அது ஒரு மீன் காலம் !

'கள்ளக்குறிச்சிக்கும் மேற்கே... வெள்ளி மலை யில் இருந்து இறங்கி வருவது மணிமுத்தா ஆறு. விருத்தாசலத்துக்கு அருகில் அதன் வடகரையில் அமைந்து உள்ள ஊர்களில் ஒன்றுதான் என் தொட்டில் மண்... சு.கீணனூர்.

என் 16 வயது வரையிலும் மீன்களை விலை கொடுத்து வாங்கி உண்ணாதவர்கள் என் ஊர் மக்கள்.

ஆறு, ஏரி, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், விளா மரத்துக் குட்டை, கலுங்குப் பள்ளம், கல்லாம்பத்தி மடு என ஆண்டு முழுக்கத் தண்ணீர் புழக்கம் உள்ள ஊராக அழகுற அமைந்திருக்கும்!

குதிகாலால் அழுந்த அழுத்திவிட்டாலே, தண்ணீர் ஊற்று எடுக்கும் ஊத்தங்கால் பகுதியில் 'மடுமுழுங்கி நெல்’ விளைந்த மண் என் மண்.

தலைக்கு எண்ணெய் வைத்த பெண்ணின் தலையில்... வடிகஞ்சியைத் தேய்த்து ஆற்றின் குளியல் துறையில் மல்லாக்க மிதக்கவிட்டு மற்ற பெண்கள் அப்பெண்ணின் கூந்தலை அலசிவிடுகை யில், இன்னொரு பெண்ணின் முந்தானையால் அங்கே மொய்க்கும் மீன்களை அள்ளினால் அன்று அங்கே குளிக்க வந்த அத்தனைப் பெண்கள் வீட்டி லும் மீன்குழம்புதான்.

ஆற்றங்கரையில்தான் சு.கீணனூர் என்றாலும், புன்செய் பயிர்களே அதிகம். வரகு, சோளம், மல்லாட்ட, துவரை, நரிப் பயிறு, செப்பயிறு, தட்டைப் பயிறு, பச்சைப் பயிறு, உளுந்து, மொச்சை, கொட்டமுத்து என எல்லாவிதமான தானியங்களும், எம் மூத்தோர்களின் காய்ப்பு காய்த்த கைகளின் உழைப்பால் காய்த்து மகிழ்ந்த ஊர்.

நடவு நடுகிற போதோ, களை எடுக்கிறபோதோ, அறுவடை செய்கிறபோதோ, அழுகிற குழந்தையை யார் முதலில் தூக்குகிறார்களோ... அவர்களின் மார் பில் பால் குடித்துப் பசியாறியவர்கள் நாங்கள். அதனால் புன் செய்க்காட்டின் அம்மாக்கள் அனை வருமே எங்கள் அம்மாக்கள்.

தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, நலுங்கு, ஒப்பாரி, சடுகுடு, ஆறாள் பாரி, எட்டாள் பாரி, கிட்டிப்புள் என வாழ்க்கை வழி நெடுகிலும் பாடல்களாய்ப் பூத்துப் பூத்துச் செழித்தது என் ஊர்.

அடைமழைக் காலத்தில் வெள்ளம் புரண்டு வருகிறபோது, கீணனூர் ஒரு தீவாகிவிடும். உள்ளி ருந்து வெளியே... வெளியில் இருந்து உள்ளே இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாது.

இப்படி... தண்ணீரையே மாலையாக அணிந்து மகிழ்ந்து இருந்த என் ஊருக்கு ஏழெட்டு கல் தொலைவில்தான்... அதோ அந்த... நெய்வேலி!

60, 70 ஊர்களை அப்புறப்படுத்திவிட்டு... 200 அடி ஆழத்துக்கும் மேலாக... வெடி வைத்துத் தகர்த் துத்... தோண்டி தோண்டி... நிலக்கரி எடுத்தபடி... ராட்சசக் கருவிகள் எம் திசை நோக்கியும் முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.

கடல் தண்ணீரும் உள்ளே வந்துவிடாமல், நிலத் தடி நீரும் நிரம்பிவிடாமல் இருக்கும்படியான எச்சரிக்கையில் தோண்டுகிறபோது, இரண்டு ஆற் றுத் தண்ணீரை நிலத்தடியில் இருந்து இடைவிடாமல் உறிஞ்சி வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது நெய்வேலி. 250 அடி ஆழத்துக்கும் கீழே போய் எம் பயிர்களுக்குத் தண்ணீர் தேட வேண்டிய வாழ்க்கை யாகிவிட்டது என் கீணனூர் வாழ்க்கை.

யார் யாருக்கோ வெளிச்சம் தருகிற நெய்வேலி, என் ஊருக்கும் என் ஊரைச் சுற்றிய தொழூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீழப்பாளையூர், மேலப்பாளையூர், புத்தூர், குமாரமங்கலம், விளக்கப்பாடி, சிறுவரப்பூர், பெருவரப்பூர், சின்ன கோட்டிமுளை, பெரிய கோட்டிமுளை, முதனை என ஏராளமான ஊர்களுக்கும் இருட்டைத் தந்து விட்ட சோகம் எத்தனை பேருக்குப் புரியப் போகிறது!

மீன்கள் தின்று பசியாறிய என் சு.கீணனூர் கொக்குகள், இன்று கறம்பில் மேயும் ஆடு, மாடு களின் காலடிகளில்... வெட்டுக் கிளிகள் தேடிப் பசியாறிக்கொண்டு இருக்கின்றன!''

படங்கள்: ச.தேவராஜன்


VIKATAN