திங்கள், நவம்பர் 29, 2010

அண்ணைக்கு அன்னை

அண்ணைக்கு அன்னை
-அறிவுமதி

அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்..
............
விரைவில் ஒலிவடிவில்

9 கருத்துகள்:

திவ்யா மாரிசெல்வராஜ் சொன்னது…

ஒலி வடிவில் கேட்க நாங்களும் ஆவலாக உள்ளோம்.

ர.சுரேந்தர் சொன்னது…

ungaludaya kavithai yenakku migavum pidithirukirathu yennaku thamizh mozhi yenral migavum pitha onru ammozhiyizh ilakanam karka vendum yendru aasai solli tharuveergala

suren http://thamizhaithedi.blogspot.com

Thangaa சொன்னது…

உங்கள் கவிதை
மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது..
உங்கள் தமிழ் தொண்டு வளரட்டும்...
உங்கள் தொண்டுக்கு என் வாழ்த்துக்கள்.

இங்கனம்,
அ.தங்கரசன்

ஸ்வாதி சொன்னது…

என் கண்ணீர் துளிகளுக்கு திறனிருந்தால் இங்கு பின்னூட்டமாயிருந்திருக்கும்..
என் வார்த்தைகளுக்கு வலிமையிருந்தால் இங்கு வரிகளாய் வந்திருக்கும்,,..முடியவில்லை அண்ணை..!

கவிப்புலி சொன்னது…

anna,
annanin
annaiykku
aaruthalum
anivar
manathukku
theruthalum
tharum
kavithai
thanthatharkaai
nandrigal

Unknown சொன்னது…

//உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்//

கவிதைக்கு நன்றி! அருமை!

ஸ்வாதி சொன்னது…

தமிழ் மதி கூறியது...

ஒலி வடிவில் கேட்க நாங்களும் ஆவலாக உள்ளோம். @ உங்களுக்காக ஒலிவடிவில்....அப்துல் ஜப்பார் ஐயாவின் குரலில்..
http://smilebox.com/playEmail/4d6a49774d44637a4f544a384e5445344d54637a4d7a493d0d0a&sb=1

ka.maheshkumar சொன்னது…

annaiku annai nenjaipilygirathu 'anna'

R.ANBARASAN சொன்னது…

AVAN THAIKKU MADDUM
THALAI MAGAN ANDRU,
AVANE THAMILARGUM
THALAIMAGANAM.

VARALALU SOLLUM
VEERA THAMILAR KATHAI,
NAMBINEN ALLA- NAAN,

VARALARAI ENGU
VALLNTHU SIRANTHANE
YEM THAMIL MANNAN
EVAN PEYAR SOLLUM-ANTHA
VARALARU NAALAI !!!

NANDRIKAL KODI,
THAAMILAN MAANAM KAAKUM
UN PONDRORKU.

R.ANBARASAN.