திங்கள், டிசம்பர் 04, 2006

அண்ணன் அறிவுமதிக்கான வலிகள்

நெகிழ்வுரை - இரா. நல்லகண்ணு

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .

உலகில் பல்வேறு நாடுகளில் ஆளும் பாசிச சக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், தப்பிப் பிழைத்து வாழத்துடிக்கிறார்கள். பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போய் உயிர் வாழலாமென்று நினைத்து புலம்பெயர்ந்து செல்கிறார்கள். இவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். உலகெங்கும் அகதிகள் பிரைச்சனையும் குடிமக்களின் பிரைச்சனையாகக் கருதப்பட வேண்டுமென்று உலக மனித உரிமை அமைப்புகளும், செஞ்சிலுவைச்சங்கமும் அங்கீகரித்துள்ளன.

அதில் நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. திபத்திலிருந்து வெளியேறி வந்த புத்த பிட்சு தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டின் மரியாதைக்குரிய அகதிகளாக ராஜோபசாரத்துடன் நடத்தப்படுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள்.

இலங்கை இனப்பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வருகிறது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

19ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வேலையாட்களாக இந்தியாவில்லிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மலைகளில் தேயிலைத் தோட்டம் போட்டுக்கொடுத்தார்கள். நாடுகள் விடுதலை பெற்றதும் நாட்டைப் பண்படுத்திக் கொடுத்த இந்தியத் தமிழர்களை இலங்கை அரசு விரட்டியது. நாடற்ற தமிழர்களாகக் கருதப்பட்டார்கள். சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் நடந்தது. பல்லாயிரம் பேர் இந்தியாவில் தமிழகத்துக்கு வந்துநிரந்தர அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாக்குரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக் குடிகள், அத்தீவின் பெருமைக்குரியவர்கள் மட்டுமல்ல; தமிழுக்கும் பலவகையில் பெருமை சேர்த்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள் மகாகவி பாரதிக்கு விழா எடுக்கவேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஆறுமுக நாவலர், கனகசபைப் பிள்ளை, ந.சி. கந்தையா இலக்கியத்தில் புதிய பார்வையைக் கொடுத்த பேராசிரியர்கள்; கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞ்ஞர்கள் அரும்பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் எழுத்திலக்கிய முன்னவர்கள்.

இத்தகைய பெருமை சார்ந்த மக்களின் வாரிசுகளான ஈழத்தமிழ் மக்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்

நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.

இது கடல் கடந்து வந்தவர்களின் முதல் சோகம்.

அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்

வலிக்கவில்லை

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது

இது இரண்டாவது சோகம்.

தமிழ் அகதிகள் வாழும் இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, நெஞ்சை உலுக்குகிறது.

நேற்று வரை
சேலைகள்
இன்று முதல்
சுவர்கள்

காதவழி தூரத்தில் உள்ளது யாழ்ப்பாணக்கரை. தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போன நமது மனசாட்சியை உலுக்குகிறார் கவிஞர் அறிவுமதி.

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறோம்

உயிர் பிழைக்க
கடல் தாண்டி

வருகிறீர்கள்
- - - - - - - - -

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

இரு கவிதைகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பிஜித் தீவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப்பெண்கள் பட்ட துயரை மகாகவி பாரதி 1916 இல் பாடினார்.

நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினில் போயதைக்
காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி
யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே
என்று.

இன்று 2006 இல் ஈழத்தமிழ் அகதிகளின் துயரத்தைச் சாரமாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. இன்னும் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு வழிகள் காண இக்கவிதைத் தொகுப்பு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.

96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்

7 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

நன்றி

தமிழ்நதி சொன்னது…

சக மனிதரின் மீது காட்டப்படும் கருணையே எழுத்தின் அடிநாதம். கவித்துவமும் கருணையும் பொருந்திய திரு.அறிவுமதி அவர்களின் எழுத்துக்கு ஈழத்தவள் என்கிற வகையில் தலைவணங்குகிறேன். அகதிகளாகவும் நாடோடிகளாகவும் உலகமெங்கும் அலையும் நாங்கள், எங்கள் ஊருக்கு ஒருநாள் திரும்பிச்செல்வோம் என்ற நம்பிக்கையொன்றினால்தான் உயிர் தரித்திருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு கவிஞர் அறிவுமதி, நெடுமாறன் ஐயா, சு.ப.வீ. இன்னோரன்ன தமிழகம் உறவுகளின் அன்பே வலுச்சேர்க்கின்றது. யாருமற்றவர்களல்ல ஈழத்தமிழர்கள் என்பதை உலகம் ஒருநாள் உணரும் நாள் மலரும்.

நதி

Thamizhan சொன்னது…

Arumai Arumai.
Innum Thamizhum Thamizhinamum Vazhvathu ivargalal than.
What powerful and touching words.
Some may not agree with the politics and solutions but all have to agree that the genocide should be stopped.It is after many years of Gandhian struggle,many many talks and so called pacts the overwhelming majority of Tamils have expressed they want to go separate.

Thamizhan சொன்னது…

Arumai Arumai!
What powerful words and feelings.It is because of these devoted that Thamizh and Thaminamum vazhkirathu.
Some may not agree with the ways and solutions.But after many many years of Gandhian struggle by their reknowned leaders,many many talks and many many disregarded pacts what other choice is there?The Tamils have voted more than 95% to go separate long time ago.

Thamizhan சொன்னது…

Arumai! Arumai!
It is these devoted energy that is keeping Thamizh and Thamizhinam going.What powerful words and feelings.Some maynot agree with the ways and solution.But what choice do they have?After many many years of Gandhian struggles and many many talks and many many disregarded pacts what is the answer?The Tamils overwhelmingly voted to go their separate ways.This should be respected by India and International community.

விருபா - Viruba சொன்னது…

நடத்துங்கோ....., நடத்துங்கோ...............

பெயரில்லா சொன்னது…

எங்களது துயரை நீங்கள்
எங்களுடன் பகிர்ந்ததுக்கு
நன்றிகள் பல அண்ணா.
உங்கள் பலம் எங்களுக்குத் தேவை