வெள்ளி, நவம்பர் 11, 2005

தமிழ்க்காற்று அறிவுமதி

தமிழ்க்காற்று

அறிவுமதி

'கலை, கவிதை எல்லாம் இருக்கட்டும். உலகின் எந்த நிலப் பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுடையவர். பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி இயங்குபவர். இளைஞர்கள் தமிழ் எழுத வருகிறார்கள் என்றால், தனக்கு வருகிற சந்தர்ப்பங்களையும் தாரை வார்த்துக் கொடுக்கிறவர். எப்போதும் நான்கு 'தம்பி'களோடே இருப்பதால் சிந்தனையில் மார்க்கண்டேயர்...
அவர்தான் அறிவுமதி.


'வாடி வாடிநாட்டுக்கட்டை
வசமா வந்துமாட்டிக்கிட்டே...
ஆளில்லா ஆத்தாங்கரை
அதுக்கு இப்பஎன்னாங்குறே...'

என்று அதிரடியாகத் காதலிக்கக் கற்றுத் தருகிற அதேநேரம்,

'கண்ணாலே உய்யாஉய்யா நீலயா மயா..!'
என்று தென்றலாக மாறவும் தெரிந்திருப்பவர், தான் 'பாட்டாளி' ன கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

''பட்டிக்காட்டுப் பையனான என்னை, திரைப்பட வாசலுக்கு அழைத்துச் சென்றவர்கள் - பூவை செங்குட்டுவன், என் நினைவில் வாழும் நண்பர் - இயக்குநர் தசரதன் ஆகியோர்.

அந்த அல்லிநகரத்து அழகுக் கறுப்பனின் 'பதினாறு வயதினிலே' படம் பார்த்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்ற ஆவல்தான் எனக்குள் உயர்ந்ததே தவிர, பாடலாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் நொங்குநீர் தடவிய வேர்க்குருவாய் தணிந்துவிட்டது.

'கிழக்கே போகும் ரயில்' திரைப் படத்துக்கு நான் எழுதிய கவிதை மடலைப் படித்து வியந்த இயக்குநர் பாரதிராசா தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாக்யராச் அவர்களும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். நான் பாக்யராசிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து வல்லபன், பாலுமகேந்திரா, பாரதிராசா என இயக்குநர் பயிற்சி நீண்டது.

எனது இயக்குநர் பாலுமகேந்திரா தெலுங்கில் இயக்கிய 'நிரீக்சனா'வை எனது நண்பர்கள் இரகுபதிரமணன், பாபு ஆகியோர் 'கண்ணே கலைமானே' என்று தமிழில் செய்தபோது, அதில் பாடல்கள் எழுத வற்புறுத்தினார்கள்.

'தாலாட்டே! நீ தூங்கிப்போக நான் தாயானேன்!
நாள்காட்டித் தாள் தேங்கிப்போக நான் நீயானேன்!'
என இசைஞானி இளையராசா இசையில் எழுதிய அந்தப் பாடல்களை மறக்க முடியாது.

அப்புறம்... 'அன்னை வயல்' திரைப்படத்தில் என் பொன்வண்ணன் எழுதச் செய்த இரு பாடல்கள். சிற்பியின் இசையில்...

'பூவே! வண்ணப் பூவே! கிழக்கே பொட்டு வைத்தாயே!' என்று என் திரைப்பயணம் துவங்கியது.

'கிழக்குச் சீமையிலே' திரைப் படத்தில் பணியாற்றுகிறபோது என்மீது நம்பிக்கை வைத்த அண்ணன் தாணு அவர்கள், 'பிரியதர்சன் இயக்கும் 'சிறைச் சாலை' திரைப்படத்துக்கான உரையாடல்.. பாடல்கள் அறிவுமதி' என்று அறிவிக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?' என்றார்.
'சரி' என்றேன்.

திரைத்துறையில் எனக்கு 'விடுதலை' பெற்றுத் தந்தது 'சிறைச்சாலை'.

'மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ,
இன்று எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ,
கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ,
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ..
ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா..
அன்பே நீ வா! வா! காதல் குறுந்தொகையா,

என அகத்துறைப் பாடல்களில் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடுவதாக அமைந்த..

'வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!

என்கிற புறப்பாடலிலும் இலக்கியச் செழுமையுடன் தமிழ் செய்ய வாய்ப்புத் தந்தவர் அண்ணன் தாணு அவர்கள்தான்.

முதன்முதலில் இசைஞானி இளையராசா அவர்களோடு நேரிடையாக அமர்ந்து எழுதிய பாடல். 'இராமன் அப்துல்லா' படத்தில் இடம்பெற்ற 'முத்தமிழே! முத்தமிழே!' பாடல்தான். அதில் வரும் காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை! நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! என்கிற வரிகளை இசைஞானியும் பாலு மகேந்திராவும் தாய்மையுடன் பாராட்டினார்கள்.

'தேவதை'யில் நண்பர் நாசருக்காக நான் எழுதிய பாடல்...

'தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபம் அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே'
தீப ஒளியில் சூழலே பிரகாசிக்க அதி அற்புதமாக அந்தப் பாடலைப் படம் பிடித்திருந்தார்கள். பிரமாண்டங்களைக் காட்டி வித்தைகள் பண்ணுகிறவர்களுக்கு மத்தியில் எளிமையின் அழகால் சிறப்புச் சேர்த்திருந்தார் ராசா.

அதேபோல, 'சேது'. என் தம்பி பாலாவின் முதல் படம். மனதின் வலியை அத்தனை உக்கிரமாக நான் அதுவரை உணர்ந்ததில்லை. காதலை இளமையின் கொண்டாட்டமாகவே பார்க்கத் தருகிற தமிழ்த் திரைப்பட உலகில் அதன் மறுபக்கத்தை, ஆன்மாவின் அலறலோடு அள்ளிக்கொண்டு வந்த பாலாவின் படத்தில்...

'எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ... அறிவார்'

பாடலை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த தமிழும், வாணியம்பாடியில் அப்துல் ரகுமான் அவர்கள் தந்த தமிழும்தாம் என்னுடைய பாடல்களில் இலக்கிய அழகுகள் ஒளிரப் பயன்படுகின்றன என்பதை இங்கே நான் நெகிழ்ந்த நன்றியில் பதிவுசெய்ய வேண்டும்.

'பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!

ஒருவரி நீ ஒருவரி நான்
திருக்குறள் நாம் அன்பே! அன்பே!
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே?'

'பிரியாத வரம் வேண்டும்' திரைப் படத்துக்காக எழுதிச் சென்றிருந்த இந்த வரிகளைப் படித்ததும் இசையமைப்பாளர் இராச்குமார் உணர்ச்சிவசப்பட்டுத் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எழுந்து நின்று என் விரலில் அணிவித்தார். 'நான் தங்கம் அணிவதில்லை' என்றேன். 'இது உங்களுக்கில்லை.. தமிழுக்கு' என்று கூறி கட்டியணைத்துக்கொண்டார்.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடல் பதிவுகளின்போது இசைப் புயல் ஏ.ர். ரகுமான் அவர்களிடம் அண்ணன் தாணு அவர்கள் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதை நினைவில் வைத்து இயக்குநர் அழகம்பெருமாளிடம் சொல்லி 'உதயா' திரைப்படத்துக்காக ஒரு மெட்டு தந்து எழுதிக்கொண்டு வரும்படி கூறியிருந்தார். அது ஒரு மண விழாப் பாட்டு.

பனிக்குகையின் உச்சியிலிருந்து பனித்துளிகள் சொட்டிச் சொட்டி பனிச் சிற்பங்கள் உருவாக்குவதுபோல் அவர் உருவாக்கிய 'புது வெள்ளைமழை... என் மேல் விழுந்த மழைத்துளியே... மார்கழிப் பூவே...' போன்ற உயிரைப் பிழியும் மெல்லிய பாடல்களில் எனக்குப் பெருவிருப்பம். எனவே, அவரோடு இணைகிற முதல் பாடல் அத்தகைய மெல்லிய மெட்டாக இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறி இந்த மெட்டைத் திருப்பித் தந்துவிட்டேன். அதற்காக எதுவும் நினைக்காமல்.. 'அப்படியா கூறினார்... அப்படியானால் அப்படியொரு பாடலை அவரை எழுதச் சொல்லுங்கள்.. பயன்படுத்துகிறேன்' என்று சொல்லியனுப்பினார்.

'அழவைப்பேன் உன்னை அன்பே!
என்னைக் கிள்ளி!
விழ வைப்பேன் உன்னை அன்பே!
என்னைத் தள்ளி
இதயம் திறந்து இறங்கிப் பார்த்தேன் நான் நான்

நான் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தாய் நீ நீ நீ
மழையைப் பிடித்து ஏறிப் பார்த்தேன்நான் நான் நான்
உயிரை உதறி உலரப்போட்டாய் நீ நீ நீ'

என்று நான் எழுதியனுப்பிய பாடலைப் படித்து மகிழ்ந்து, இன்னொரு மெட்டையும் தந்தனுப்பினார்.

'ஊனே ஊனேஉருக்குறானே!
உயிரின்மீதே உயிரை வைத்துநசுக்குறானே!'
என்ற இந்தப் பாடலுடன்தான் அவரை முதன்முதலாக அழகம் பெருமாளுடன் சந்தித்தேன். பாடலைப் படித்து மகிழ்ந்து, அன்றிரவே பாடகர்களை அழைத்துப் பதிவு செய்தார். 'தெனாலி'யிலும் உடனே வாய்ப்புத் தந்தார்.
'வல்லினம் மெல்லினம்இடையினம்நாணம் கூச்சலிடசிவந்தனம்' இத்தகைய இலக்கிய அழகுகளை அவர் விரும்பிச் சுவைக்கிறார்.

சந்தம் நெருடாத, தமிழ்ச் சத்து குறையாத சொற்களுக்காகத் தாகம் வளர்த்துத் தவிப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

'தோம் தோம்தித்தித்தோம்தொலைவிலிருந்தும்சந்தித்தோம்
கண்ணால்கண்ணில் கற்பித்தோம்காதல்பாடம் ஒப்பித்தோம்
தீண்டத் தீண்ட தூண்டும்விரலைத் திட்டிக்கொண்டே தித்தித்தோம்!'


என்ற பாடலை இயக்குநர் பிரசாத், எடுத்துப்போய் வித்யாசாகரிடம் தந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாடலுக்கான மெட்டு தயார்!

அடிப்படையில் நானொரு புலூசைக் காட்டுப் பிள்ளை. எனக்குள் அமெரிக்காவைத் திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. 'ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரியுமா?' என்கிறது. ஊத்தாவுக்குள் சிக்கிய விறால்மீன் உள்நுழைந்து துழாவும் கைகளுக்கு அகப்படாமல் நழுவிப்போவதாய், நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவை விற்றுத்தானா பிள்ளைகளுக்குச் சோறு போட வேண்டும் என்கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு நடுவிலும் என் புலூசைக் காட்டுத் தமிழையும் பாடல்களில் பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எப்படி நன்றி சொல்ல!

நடவு நடும் பெண்கள்எல்லாம் அழுக்கு பாடல்கள் தவிர! இது ஒரு சப்பான் நாட்டு அய்க்கூ. இதுதான் உண்மை.
ஆனால், அத்தகைய நடவுப் பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து, வரிசை கட்டி ஏர் உழுத இடத்தில்... இன்று ஒற்றை உழுவண்டி பேரிரைச்சலில் உழுதுகொண்டிருக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கு நடுவிலும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிசைப் பாடல்!

பாடல்களைப் பாடியபடியே உழுதவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடியபடியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே பேருந்துகள் ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற்றப் பட்டுவிட்டார்கள். அள்ளி அள்ளி இலவசமாகத் தந்தவர்களின் மீது, 'வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழலாச்சே!''

நன்றி ; ஆனந்தவிகடன்

12 கருத்துகள்:

நண்பன் சொன்னது…

அண்ணன் அறிவுமதிக்காகத் துவங்கப்பட்ட வலைப்பூ இது.

அனைவரையும் இங்கு வரவேற்கிறேன்.

கருத்தளியுங்கள்

அன்புடன்

நண்பன்.

பரஞ்சோதி சொன்னது…

அண்ணன் அறிவுமதி அவர்களின் தமிழ்த் தொண்டை போற்றும் வலைப்பூவாக மணம் வீச வாழ்த்துகிறேன்.

சென்ற வாரம், அண்ணன் அறிவுமதி அவர்களின் பேச்சை பொதிகை தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.

ஆகா என்னமா, அமைதியின் உருவமாக, நான் சொல்ல வந்ததை தெள்ளத்தெளிவாக் பேசுவதையும், அவரது முகத்தில் தெரிந்த அந்த வசீகர புன்னகையையும் கண்டு மயங்கி விட்டேன். அவரை நேரில் பார்த்தேன், ஆனால் பேசத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பரஞ்சோதி சொன்னது…

அண்ணன் அறிவுமதி அவர்களின் தமிழ்த் தொண்டை போற்றும் வலைப்பூவாக மணம் வீச வாழ்த்துகிறேன்.

சென்ற வாரம், அண்ணன் அறிவுமதி அவர்களின் பேச்சை பொதிகை தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.

ஆகா என்னமா, அமைதியின் உருவமாக, நான் சொல்ல வந்ததை தெள்ளத்தெளிவாக் பேசுவதையும், அவரது முகத்தில் தெரிந்த அந்த வசீகர புன்னகையையும் கண்டு மயங்கி விட்டேன். அவரை நேரில் பார்த்தேன், ஆனால் பேசத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ENNAR சொன்னது…

//'வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் //
நல்ல கருத்துகள்

ENNAR சொன்னது…

பின்னூட்டம் வரவில்லையே

b சொன்னது…

அவனவன் குஸ்புக்கு பெரிதா சுகாசினிக்கு பெரிதா(மானத்தை சொன்னேன்னுங்க) என்று இணையத்தை நாற அடிக்கையில் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்களும் நன்றியும்.

புதுப்பதிவில் பின்னூட்ட முடியவில்லை கவனிக்கவும்.

தமிழ் அலை சொன்னது…

நன்றி நண்பர்களே

குஷ்பு, சுகாசினி எல்லாம் இருக்கட்டும்.

இது தமிழ் கவிதைகளுக்கான தளம் மாத்திரமே....

வேறு வித 'படைப்பாளி'க்களுக்கானதல்ல...

ஆக இங்கு கவிதை பேசுவோம்.

கவிதை கருத்துகளைப் பேசுவோம்

மற்றவை வேண்டாமே.

தமிழ் அலை சொன்னது…

என்னார் -

பின்னூட்டங்கள் வரும்.

அதாவது, அவை வாசிக்கப்பட்டு - அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என moderation செய்யப்பட்டு - பின்னர்.

இல்லன்னா, இந்த அனாமதேயங்களோட தொல்லை தாங்க முடியலீங்க.

இது மனங்கவர்ந்த கவிஞருக்காக, நேரம் ஒதுக்கி செய்கிறோம். இதில், நாகரீகமடைய மறுப்பவர்களுக்கெல்லாம் உட்கார்ந்து பதில் சொல்வதல்ல எங்கள் வேலை.

அதனால் தான் இப்படி.

நீங்கள் கவலைப்படாமல் எழுதுங்கள்.

உங்கள் பதிவுகள் கண்டிப்பாக வெளிவரும்

- அன்புடன்,


நண்பன்

தமிழ் அலை சொன்னது…

பரஞ்சோதி,

அண்ணன் மீதுள்ள அன்பினால், இரண்டு முறை பதிந்து விட்டீர்கள் போலிருக்கிறதே!!

ஒன்றை நீக்கி விடுகிறேன்.

சரிதானே?

சிவகுமார் சுப்புராமன் சொன்னது…

அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .




*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .




*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.





*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.





*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்



*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே




*எல்லோரையும் பர்க்க ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.




*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்



*என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை



*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்

வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது



*''நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்

தமிழ் அலை சொன்னது…

சிவகுமார்

மிக்க நன்றி

சின்ன சின்ன வரிகளாகத் தொகுத்து தந்து மனம் குளிர்வித்தீர்கள்.

நன்றி - மிகவும்.

Unknown சொன்னது…

தமிழுக்காய் வாழ்கிற ஒருவர்