வியாழன், பிப்ரவரி 28, 2013

எங்கள் அப்பா!!!!





அப்பா!
எல்லா அப்பாக்களையும் 
போல் 
நீயும் 
இருந்திருந்தால் 
என் 
தாத்தாவும் 
​பாட்டியும் 
இந்நேரம் 
முசிறியில் ​
​மூச்சோடு 
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா 
​அப்பாக்களையும் 
போல் 
நீயும் 
இருந்திருந்தால் 
என் 
அக்கா 
அமெரிக்காவிலும் 
என் 
அண்ணன் 
கனடாவிலும் 
நான் 
இலண்டனிலும்
சொகுசாகப் 
படித்துக் 
கொண்டிருப்போம் 

என் 
அப்பாவா நீ 
இல்லையப்பா 
நீ 
நீ 
நீ 
எங்கள் 
அப்பா!

எங்கள் என்பது...
அக்கா 
அண்ணன் 
நான் 
மட்டும் 
இல்லை!

எங்கள் என்பது ...
செஞ்சோலை 
காந்தரூபன் 
செல்லங்கள் 
மட்டும் 
இல்லை!

எங்கள் என்பது...
உலகெங்கிலும் 
உள்ள 
என் 
வயது 
நெருங்கிய 
என் 
அண்ணன்கள் 
என் 
அக்காள்கள் 
என் 
தங்கைகள் 
என் 
தம்பிகள் 
அனைவருக்குமானது!

ஆம் ...அப்பா!
நீ 
எங்கள் 
அனைவருக்குமான 
'ஆண் தாய் '
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன் ...

நான் 
மாணவனாக 
இருந்திருந்தால் 
என் 
மார்பில் 
மதிப்பெண்களுக்கான 
பாதகங்கள் 
பார்த்திருப்பாய்!

நான் 
மானமுள்ள 
மகனாய் 
இருந்ததால்தானே அப்பா 
என் 
மார்பில் 
இத்தனை 
விழுப்புண்கள் 
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது 
மனைவியின் 
வயிற்றில் 
வளர்ந்த 
கருவுக்கும் 
கூட 
கருணை காட்டிய 
அப்பா!

உன் 
பிள்ளை 
உலக 
அறமன்றத்துக்கு 
முன்.
ஒரே 
ஒரு 
கேள்வி 
கேட்கிறேன்!

பன்னிரெண்டு 
வயது 
பாலகன் 
துப்பாக்கி 
தூக்கினால் 
அது 
போர்க் 
குற்றம்!

பன்னிரெண்டு 
வயது 
பாலகன் 
மீது 
துப்பாக்கியால் 
சுட்டால்...
இது 
யார்க் 
குற்றம்!

என்னைச் சுட்ட 
துப்பாக்கியில் 
எவர் 
எவர் 
கைரேகைகள்!

உலக 
அறமன்றமே!
உன் 
மனசாட்சியின் 
கதவுகளைத் 
தட்டித் 
திறக்க 

உலகெங்கிலுமுள்ள 
பாலச் 
சந்திரர்கள் 
அதோ 
பதாகைகளோடு 
வருகிறார்கள்!

பதில் 
சொலுங்கள்!....

வியாழன், மார்ச் 15, 2012

ஆடல் கண்ணகி


மரங்களின் தோள்கள் மீது
கைகள்
போட்டுக்கொண்டு
ஒரு
மலைக்
கிழத்தி
மகிழ்ந்தாடிக்கொண்டிருந்த
பொழுதில்
தெறித்த
ஒற்றைச்
சலங்கையெடுத்து
ஊன்றினள் ஒருத்தி
உயர்ந்த
நல்
விதை
என


வானம் திகைக்க
வளர்ந்த
மரத்தில்
சலங்கை நெற்றுகள்
சடை
சடையாகக்
காய்த்துத் தொங்கக்
கோயிற்
காட்டின்
அடம்புகள் விலக்கி
வந்த
உடுக்கையின்
பேச்சை
உள்
குடித்த
வெறியில்
அடவுகள் கட்டி
ஆடத்
தொடங்கிய
மரத்துச் சலங்கைகளது
பேரோசை
போய்
கண்ணகியாளைக்
கை
பிடித்து
இழுத்து வந்து
ஆடடி
அம்மே
ஆடு
ஆடு
என்றது
அதிர்ந்தவள் நடுங்கி
ஆடத்
தெரியாதே
என்றாள்
அதிரச் சிரித்த
அத்தனை
சலங்கைகளும்
ஆடத்
தெரியாதாம்
அம்மைக்கு
ஆடத்
தெரியாதாம்
என
உரக்கக் கூவி
உச்சுக்
கொட்டின
கூசிக் குறுகிக் குழந்தையாய்
நின்ற
கண்ணகி
கண்களிலிருந்து
உதிர்ந்தன
கண்ணீர்ப்
பரல்கள்
கண்ணீர்ப்
பரல்கள்
பரல்களின் விசும்பலில்
பட்டென
விழித்த
கொற்றவைக்
கிழவோள்
கூர்ந்து நோக்கி தன்
குழந்தையைத்
தொட்டாள்
கட்டியணைத்துக்
கண்ணீர்
துடைத்தாள்
சலங்கைகள் பறித்துச்
சடுதியில்
கோத்துக்
கண்ணகியாளின்
கால்களில்
கட்டினாள்
ஆடிப்போன அவளோ
ஆடக்
கூடாதே
தாயே
நான்
ஆடக்
கூடாதே
என்று
அழுதாள்
அழுதாள்
அழுதாள்
கோபம் தலைக்கேறிய
கொற்றவையாளோ
குனிந்து
தன்
கால்களிலும்
சலங்கைகள் கட்டிச்
சட்டென
நிமிர்ந்தவள்
செவ்வாடை தூக்கிச்
செருகிக்
கொண்டு
அடவுகள் வியக்க
ஆடத்
தொடங்கினாள்
அடவுகள்
சுழற்றிய
அதீதக் காற்றில்
மரங்கள்
ஆடின
மலைகள்
ஆடின
பறவைகள்
ஆடின
பனைகள்
ஆடின
கண்ட கண்ணகி
கண்களைத்
துடைத்தாள்
முதல்
முறை
மண்ணை
மூர்க்கமாய்
உதைத்தாள்
காடு கிழவோள் காட்டுடன்
ஆடும்
அத்தனை
அத்தனை
அதிர்வையும் அடடா... அடடா...
அள்ளி
விழுங்கி
ஆவேசமுற்று
ஆடத்
தொடங்கினாள்
ஆண்
வலைப்
பின்னல்கள்
அனைத்தும்
கிழியக்
கிழியக்
கிழிய
பெண்
சுமைப்
பாறைகள்
பிளந்து
சரியச்
சரியச்
சரிய
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
கண்ணகி
சலங்கைகள் அனைத்தும்
ஒலிகள்
ஒடுங்கி
உம்மென்றாயின
கொற்றவை அம்மா
கொதித்துப்பேசினாள்...
நடவு நடத் தெரியாத
கைகள்
நடம்
ஆடத்
தெரியாத
கால்கள்
நடமாடத் தகுதியற்றவை
மகளே
நடமாடத்
தகுதியற்றவை
உடலுழைப்பின்
உற்பத்தியே
இசையும்
ஆடலும்
மாட்டின் நெற்றியில்
மாட்டிய
சலங்கைகளே
ஆட்டக்
கால்களின்
அணிகள்
ஆயின
பரத முனிவனா
பறித்துத்
தந்தான்
பகர்பவர் எவரையும்
பார்த்து
நகைப்பேன்
இளங்கோ என்பவர்
யாரெனக்
கேட்கின்
அரசருக்கடுத்த
அடுக்கில்
நிற்பவர்
ஆம் அவர்
வணிகர்
அடியே கண்ணகி
அளவிற்கதிகப்
பொருள்
வளப்
பெருக்கில்
பெண்களைப் பெரிதும்
பெருமை
செய்தலாய்க்
கற்பெனும்
பொய்யைக்
கற்பிதப்
படுத்தலாய்
உழைக்கத் தடுத்து
உட்கார
வைத்து
இசையைக்
கற்றல்
இழுக்கெனச்
சொல்லி
ஆடல்
கற்றல்
ஆகாதெனத்
தள்ளி
மண்மகள் அறியா
பாதக்
காரிகளென்று
மாபெரும்
பொய்யில்
மகளிரை
அமுக்கி
மாந்த இயல்பின்
மரபை
மறித்ததால்
அல்லோ
இசையும் நடமும்
இயல்பாய்த்
தெரிந்த
கோவலப் பையன்
இரண்டும்
இல்லா
உன்னை
விடுத்து
ஆடலும்
பாடலும்
அழகும் என்று இக்
கூறிய
மூன்றிலும்
சிறந்த
மாதவியாளிடம்
மனதைக்
கொடுத்து
உன்னை
முதலில்
உடனே
இழந்துத்
தன்னையும்
முடிவில்
தானே
இழந்து
வரலாற்றுப் பிழையாய்
உன்
வாழ்வைச்
சிதைத்தான்
உடைமைப் பொருளாய்
உள்ளே
தள்ளி
மகளிரின் உரிமைகள்
மறுத்ததால்தாமே
இன வரலாற்றில்
இத்துணை
இழப்புகள்
இத்துணைச்
சரிவுகள்
ஆடலும் பாடலும்
இனத்திற்குத்
தூரமாய்
இருக்கும்
வரையில்
எழுச்சி நெருப்புகள்
எழுப்பவே
முடியா
அடிமைக்
குணங்களை
அகற்றவே
முடியா
அதனை உணர்ந்தே
அம்மா சொல்கிறேன்...
ஆடடி
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
அம்மா கொற்றவை
ஆணையும்
சமமாய்
ஆண்ட
தலைமையள்
பாடலும்
ஆடலும்
பழுத்தச்
செழுமையள்
அவ்வழிதானடி
அழுத்திச்
சொல்கிறேன்
தொடங்கடி
கண்ணகி
துணங்கை
குரவை
துடியலி பறையலி
தூய
நல்
குழலொலி
துயிலா
முழவொலி
இனிதாம்
யாழொலி
அனைத்தையும்
விழுங்கி
ஆடடி
மகளே
அருமைக்
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடடி யம்மே
ஆடு
ஆடு
ஆடு!

அறிவுமதி குரலில்  : http://www.youtube.com/watch?v=qDWMxNLuP8o&feature=share

ஓவியங்கள் : ம.செ  
நன்றி விகடன்











சனி, ஜனவரி 07, 2012

பலாச்சுமை





கடலூர் மாவட்ட கண்ணீர்....
அறிவுமதி அண்ணன் எழுதியுள்ள
பலாச்சுமை கவிதை
ஜூனியர் விகடனில்

வெள்ளி, டிசம்பர் 09, 2011

கார்த்திகைச் சுடர்கள் !



திகுதிகு திகுவென
சேர்ந்துத் தீமூட்டி
செகத்தார்
எரித்து முடித்த
எம்
வெந்த காட்டுக்குள்
கிடக்கும்
வேகாத
முட்டைகளுடைத்து
வெளிவருகின்றன
கார்த்திகைச்
சுடர்கள்!

துயிலும் பிள்ளைகளின்
தூங்காத
கனவுறிஞ்சி
நெடுநெடென
நிமிர்ந்தெழுந்தப்
பால
மரங்களெல்லாம்
பதறி
அழ
பதறி
அழ
இடங்கள் சிதைத்து
எலும்புகள் சிதைத்து
எம்
வீரர்
விளைநிலத்தை
வெம்பரப்பாய்ச்
செய்த
பின்னும்
கணினிக்குள் கருத்தோடு
கட்டிவைத்தத்
துயிலுமிடம்
பொறுப்போடு
தேடி
புதைத்துவைத்த
வன்மத்தைப்
புத்திக்குள்
மீட்டெடுத்துப்
புலம் பெயர்ந்த
உறவெல்லாம்
நம்பிக்கை
அகல்
கொளுத்த
நம்பிக்கை
அகல்
கொளுத்த
எரியும் சுடர்களின்
ஏராள
ஒளி
கூடி
உரக்க
உச்சரிக்கின்றன...

''எங்கள்
ஈகம்
அணையாது
எங்கள்
தாகம்
தணியாது!''

நன்றி: விகடன்

செவ்வாய், ஜூலை 12, 2011

பேரறிஞன் என்கிற சொல்லை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

ஆனால் வேரறிஞன் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

கவிஞர் அறிவுமதி.



ஆழத் தமிழுக்குள்

ஆய்வுப் பணிக்காக

மூழ்கி

முக்குளித்த

மூத்த தமிழ் பேரறிஞன்!

இலக்கணங்கள் இலக்கியங்கள்

எதற்கும்

குறிப்பின்றி

உடனுக்குடன் இங்கே

ஊற்றறிவில்

புதுமை சொல்லும்

உயர்த் தமிழின் வேரறிஞன்!

பண்பாட்டு விழுமியங்கள்

பக்திப்

பொருண்மியங்கள்

நாடகங்கள்

திரைப்படங்கள்

என அனைத்துக் கிளைகளிலும்

அடுக்கெடுத்துப்

பூத்த மகன்!

ஆண்டாண்டு காலமிங்கே

அழுக்கேறிக்

கிடந்த

தமிழ் இழுக்கை

துடைத்தெறிந்து

ஈடற்ற மொழியென்றால்

அது

என்றும்

தமிழ் என்றே

ஆய்வறிஞர்

ஆம்

சொல்ல

ஆதாரம் பல தந்து

அருந்

தமிழைக்

காத்த

மகன்!

மூடி வைத்த நூலகம் போல்

மூச்சிழந்து தூங்குகிறார்!

மொத்த தமிழ்

ஆய்வுலகும்

பேச்சின்றித்

தேம்புகிறார்!

ஐயா சிவத்தம்பி!

அன்னைத்

தமிழுக்கு

உம் உழைப்பு

பேருழைப்பு!

ஐயோ... உலகத்து

அனைத்துத் தமிழர்க்கும்

உம் இழப்பு பேரிழப்பு!

செவ்வாய், ஜூன் 07, 2011

அது ஒரு மீன் காலம் !


அது ஒரு மீன் காலம் !

'கள்ளக்குறிச்சிக்கும் மேற்கே... வெள்ளி மலை யில் இருந்து இறங்கி வருவது மணிமுத்தா ஆறு. விருத்தாசலத்துக்கு அருகில் அதன் வடகரையில் அமைந்து உள்ள ஊர்களில் ஒன்றுதான் என் தொட்டில் மண்... சு.கீணனூர்.

என் 16 வயது வரையிலும் மீன்களை விலை கொடுத்து வாங்கி உண்ணாதவர்கள் என் ஊர் மக்கள்.

ஆறு, ஏரி, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், விளா மரத்துக் குட்டை, கலுங்குப் பள்ளம், கல்லாம்பத்தி மடு என ஆண்டு முழுக்கத் தண்ணீர் புழக்கம் உள்ள ஊராக அழகுற அமைந்திருக்கும்!

குதிகாலால் அழுந்த அழுத்திவிட்டாலே, தண்ணீர் ஊற்று எடுக்கும் ஊத்தங்கால் பகுதியில் 'மடுமுழுங்கி நெல்’ விளைந்த மண் என் மண்.

தலைக்கு எண்ணெய் வைத்த பெண்ணின் தலையில்... வடிகஞ்சியைத் தேய்த்து ஆற்றின் குளியல் துறையில் மல்லாக்க மிதக்கவிட்டு மற்ற பெண்கள் அப்பெண்ணின் கூந்தலை அலசிவிடுகை யில், இன்னொரு பெண்ணின் முந்தானையால் அங்கே மொய்க்கும் மீன்களை அள்ளினால் அன்று அங்கே குளிக்க வந்த அத்தனைப் பெண்கள் வீட்டி லும் மீன்குழம்புதான்.

ஆற்றங்கரையில்தான் சு.கீணனூர் என்றாலும், புன்செய் பயிர்களே அதிகம். வரகு, சோளம், மல்லாட்ட, துவரை, நரிப் பயிறு, செப்பயிறு, தட்டைப் பயிறு, பச்சைப் பயிறு, உளுந்து, மொச்சை, கொட்டமுத்து என எல்லாவிதமான தானியங்களும், எம் மூத்தோர்களின் காய்ப்பு காய்த்த கைகளின் உழைப்பால் காய்த்து மகிழ்ந்த ஊர்.

நடவு நடுகிற போதோ, களை எடுக்கிறபோதோ, அறுவடை செய்கிறபோதோ, அழுகிற குழந்தையை யார் முதலில் தூக்குகிறார்களோ... அவர்களின் மார் பில் பால் குடித்துப் பசியாறியவர்கள் நாங்கள். அதனால் புன் செய்க்காட்டின் அம்மாக்கள் அனை வருமே எங்கள் அம்மாக்கள்.

தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, நலுங்கு, ஒப்பாரி, சடுகுடு, ஆறாள் பாரி, எட்டாள் பாரி, கிட்டிப்புள் என வாழ்க்கை வழி நெடுகிலும் பாடல்களாய்ப் பூத்துப் பூத்துச் செழித்தது என் ஊர்.

அடைமழைக் காலத்தில் வெள்ளம் புரண்டு வருகிறபோது, கீணனூர் ஒரு தீவாகிவிடும். உள்ளி ருந்து வெளியே... வெளியில் இருந்து உள்ளே இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாது.

இப்படி... தண்ணீரையே மாலையாக அணிந்து மகிழ்ந்து இருந்த என் ஊருக்கு ஏழெட்டு கல் தொலைவில்தான்... அதோ அந்த... நெய்வேலி!

60, 70 ஊர்களை அப்புறப்படுத்திவிட்டு... 200 அடி ஆழத்துக்கும் மேலாக... வெடி வைத்துத் தகர்த் துத்... தோண்டி தோண்டி... நிலக்கரி எடுத்தபடி... ராட்சசக் கருவிகள் எம் திசை நோக்கியும் முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.

கடல் தண்ணீரும் உள்ளே வந்துவிடாமல், நிலத் தடி நீரும் நிரம்பிவிடாமல் இருக்கும்படியான எச்சரிக்கையில் தோண்டுகிறபோது, இரண்டு ஆற் றுத் தண்ணீரை நிலத்தடியில் இருந்து இடைவிடாமல் உறிஞ்சி வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது நெய்வேலி. 250 அடி ஆழத்துக்கும் கீழே போய் எம் பயிர்களுக்குத் தண்ணீர் தேட வேண்டிய வாழ்க்கை யாகிவிட்டது என் கீணனூர் வாழ்க்கை.

யார் யாருக்கோ வெளிச்சம் தருகிற நெய்வேலி, என் ஊருக்கும் என் ஊரைச் சுற்றிய தொழூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீழப்பாளையூர், மேலப்பாளையூர், புத்தூர், குமாரமங்கலம், விளக்கப்பாடி, சிறுவரப்பூர், பெருவரப்பூர், சின்ன கோட்டிமுளை, பெரிய கோட்டிமுளை, முதனை என ஏராளமான ஊர்களுக்கும் இருட்டைத் தந்து விட்ட சோகம் எத்தனை பேருக்குப் புரியப் போகிறது!

மீன்கள் தின்று பசியாறிய என் சு.கீணனூர் கொக்குகள், இன்று கறம்பில் மேயும் ஆடு, மாடு களின் காலடிகளில்... வெட்டுக் கிளிகள் தேடிப் பசியாறிக்கொண்டு இருக்கின்றன!''

படங்கள்: ச.தேவராஜன்


VIKATAN

ஞாயிறு, ஜனவரி 02, 2011

செருப்பைக்காட்டிய கமலுக்கு

செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி

"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்@டா@மா
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!


அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு...
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்
வாயிலாக...
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்...
தமிழ் தெருப் பொறுக்குமாம்.'

வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் @பால...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..

இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்...
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்...
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.

ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.''

தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்...!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்...
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.

கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு... வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேவண்டாமா?

அன்புடன்
அறிவுமதி

திங்கள், நவம்பர் 29, 2010

அண்ணைக்கு அன்னை

அண்ணைக்கு அன்னை
-அறிவுமதி

அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்..
............
விரைவில் ஒலிவடிவில்

சனி, ஜூலை 11, 2009

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு

இனிய நண்பர்களே

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து விவரங்களுக்கும்
தமிழ் அலை ஊடக உலகம்
tamilalai@gmail.com
பேச// +91 9786218777

ஞாயிறு, மே 31, 2009

விருதுகள் மீது நம்பிக்கை

1) தாங்கள் சினிமாவிற்கு பாடல் எழுத வந்ததற்கான காரணம்?

கையயழுத்துப் போடத்தெரியாத… ஆனால் வேகாத வெய்யவிலும் புன்செய்க்காட்டு மண்ணை.. மழை நனைப்பதற்கும் மேலாக.. தம் வியர்வைத் துளிகளால் நனைத்து நனைத்து பயிர்களை விளைவிப்பவர்களாகவும்.. பயிர்களோடு பயிராய்ப் பாடல்களை விளைவிப்பவர்களாகவும் இருந்த எம்மூர் தாய்களில் ஒருத்திக்கு மகனாகப் பிறந்ததுதான்.. நான் பாடலாசிரியனாக வந்ததற்குக் காரணம்.


2) ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள்?

திரையிசைப் பாடல் எழுதுவதை விட்டுத்தான் திரையுலகிலிருந்து விலகியிருக்கிறேன். மற்றபடி.. எம் தமிழ்ப் பண்பாட்டை வலியுறுத்தும் ஆவணப்படங்களையும்.. குறும்படங்களையும் இயக்கிக் கொண்டுத்தானே இருக்கிறேன். விரைவில் .. ஒரு முழு நீளப் படத்திற்கான அறிவிப்பும் வரலாம்.


3) நல்ல பாடல்களை கொடுத்துவிட்டு, மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சினிமாவை விட்டு விலகியது சரியான முடிவா?

இசைப் பாடல்கள் என்பவை.. ஓர் இனத்திற்கு ஆயுள் முழுக்கப் குடிக்கிற தாய்ப்பால். தாய்ப்பாலில் நஞ்•கலக்க.. கருத்தாலும் சரி.. சொல்லாலும் சரி.. என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்!


4) தமிழ் சினிமாவின் இடைக்காலத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணி இசை, பாடலுக்கு சம முக்கியத்துவம் கொடுத்தது. பிறகு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பின்னர் வார்த்தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. (சில இசையமைப்பாளர்களாலும்) தற்போது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் உள்ளது. இந்த சூல்நிலையில் நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாடல் எழுதக்கூடாது?

வளர்முக நாடுகளில்... இசைப் பாடல் என்பதை.. பேருந்துகளிலும்.. மகிழ்வுந்துகளிலும்.. திருமண வீடுகளிலும்.. ஏன் இறப்பு வீடுகளிலும்.. ஏன்..ஏன் கோயில்களிலும் கூட உயிர் உருகக் கேட்பதற்குப் பதிலாக.. •யசிந்தனைகளுக்கான.. நன்பர்களோடு கலந்துப் பே•கிற குழுசிந்தனைகளுக்கான நேரங்களில் மேல் கொட்டப்படுகிற ஒலிக்குப்பைகளாகவே பயன்படுத்துகிறார்கள்.

மற்றும்..நம் இனம்.. எம் ஊர் மக்களின் வாழ்க்கையின் வலி வாங்கி வருகிற திரைப்படங்கள்.. மிக..மிக..மிகக்குறைவு. காதல் பாடல்களில்.. இலக்கிய நயமாக எழுதினாலும்.. நாளைய பெண்ணியப் பார்வையில்.. குற்றவாளியாகவே நிற்கவேண்டிய நெருக்கடி. அதுதான் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன்.


5) இசை அமைப்பாளர்களின் ஆதிக்கம் பாடலாசிரியர்கள் மீது எந்தளவிற்கு அதிகரித்து உள்ளது?

இசைஞானி, ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், சிற்பி, தினா.. என எல்லா இசையமைப்பாளர்களிடமும் நான் பணியாற்றியுள்ளேன். எவரும்.. எந்த ஆதிக்கமும் என் மீது செலுத்தியதில்லை. துள்ளல் மெட்டுக்குப் பாடல் எழுதமாட்டேன். என்று கூறி… முதன் முதலாகத் தந்தனுப்பிய மெட்டை… அழகம் பெருமாளிடம் திருப்பி அனுப்பினேன். ‘மே மாதம்’ படத்தில் வைரம் எழுதிய ‘மார்கழிப் பூவே’ போல் ஒரு மெல்லிய மெட்டில்தான் அவரோடு இணைய விரும்புகிறேன் என்றும் சொல்லியனுப்பினேன். தனது மெட்டை.. திருப்பி அனுப்பிவிட்டேன் என்று கோபப்படாமல் அப்படியா சொன்னார்.. அப்படியானால் அவரை ஒரு பாடல் எழுதச் சொல்லி எடுத்துவாருங்கள் .. மெட்டமைக்கிறேன் என்று சொன்னவர் ஏ.ஆர்.ரகுமான் நாம் நம் தன்மானத்தை உண்மையாக மதித்தால்.. நம் தன்மானத்தை மற்றவர்களும் மதிப்பார்கள்.


6) தமிழ் சினிமா கலாச்சாரத்தை சீரழக்க வழிவகுக்குகிறதா? இல்லை தமிழ் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் வகையில் உள்ளதா?

அமெரிக்கத் திரைப்படங்கள் புதிய புதிய ஆயுதங்களை.. உலகிலுள்ள ஏழைநாடுகளில் விற்பனை செய்வதற்காகவே தயாரிக்கப்படுகிற நிலை.
ஈரான் போன்ற திரைப்படங்கள்.. மனித மனங்களை மேலும் மேலும் மிருதுப்படுத்துவதற்காகவே தயாரிக்கப் படுகிற நிலை.
இன்று .. ஓர் உண்மையைச் சொல்கிறேன்.. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள்.. போதைப் பொருள்களை மீறி தமிழ்நாட்டிற்குள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
தொழிற்சாலைக் கழிவுகளால் மா•பட்டிருக்கும் ஆற்றுத் தண்ணீரை.. புதிய அறிவுகள் சூடிய இளைய வெள்ளம் மிக விரைவில் பாயும் என்று நம்புகிறேன்.
என் நம்பிக்கைக்கான முன் பெயர்கள்.. தம்பி பாலா.. சேரன்.. சீமான்.. அமீர்..பாலாஜி சக்திவேல்.. சசி.. லிங்குசாமி…


7) பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது நீங்கள் ஏன் பாடல் எழுத மறுக்கிறீர்கள்?

பெரிய கவிஞர்கள்.. சின்னக் கவிஞர்கள் என்பதெல்லாம் பாடல் உலகில் பொய். பெருங்கடவுள்கள்.. சிறு கடவுள்கள் என்கிற சொல்லாடலில் உள்ள பிழைதான் மேற் சொன்ன சொல்லாடலிலும் உன்னதாகக் கருதுகிறேன்.
நேற்று ஆடி அடங்கும் வாழ்க்கையடா எழுதிய •ரதா சின்ன கவிஞரா?
அதனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது என்று சொல்லாதீர்கள்.
இப்படி வேண்டுமெனால் சொல்லலாம்.. என்னைவிட இளைய கவிஞர்களெல்லாம்,, என்னை விடவும் சிறப்பாக எழுதுவதற்கு எண்ணிக்கையில் அதிகமாக வந்திருக்கிறபோது.. நான் ஒருவன் மட்டும் விலகிக் கொள்வதில் என்ன இழப்பு ஏற்படப் போகிறது.


8) மெட்டுக்குப் பாட்டு எழுதுவது சரியா? அல்லது பாட்டுக்கு மெட்டு அமைப்பது சரியா?

ஏர் ஓட்டுகிற போது.. நடவு நடுகிறபோது என வயல்வெளி வாழ்க்கையில்.. அவர்களே மெட்டுகள் போட்டுக் கொண்டு.. அவர்களே பாடல்கள் பாடிக் கொள்கிற வாழ்வுமரபில் வந்தவர்கள் தாம் வைரமுத்துவாக இருந்தாலும் அறிவுமதியாக இருந்தாலும்.. மற்ற பாடலாசிரியர்களாக இருந்தாலும் எனவே.. எங்களுக்கு மெட்டுக்குப் பாட்டு எழுதும் ஒன்றுதான். மெட்டுள்ள சந்த ஒழுங்கில் பாடல்களாக எழுதிக் கொடுப்பதும் ஒன்றுதான்.


9) பெண் கவிஞர்கள் சினிமாவிற்கு அதிகம் ஏன் வரவில்லை? அவர்களுக்குள்ள பிரச்சனைகள் என்ன?

பெண்களுக்கான விடுதலை நேரமீது. தமிழ்கவிதை உலகில்.. இன்று மிகச்சிறந்த பெண் கவிஞர்களின் வெற்றி.. மகிழ்வூட்டுகிறது.
திரையுலகிலும்.. தங்கை தாமரையின் வெற்றி.. மெச்சத்தக்கது. தேன்மொழி .. இளம்பிறை.. கதிர்மொழி.. ஆண்டாள் பிரியதர்´னி என நீள்கிற இந்தப் பட்டியல் மற்ற மாநிலங்களில் எப்படியயன்று தெரியவில்லை. ஒவ்வொரு இயக்குநருக்கும் தம் படத்தில் ஒரு பெண் பாடலாசிரியருக்கு வாய்ப்புதருகிற.. அல்லது புதிய பெண் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிற பெரியர்வலி இருக்குமானால்.. இன்னும் வாய்ப்பாக இருக்கும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை கூடுகிறபோதும்.. மாற்றங்கள் ஏற்படலாம்.


10) சினிமா தவிர வேறு இலக்கிய பணிகளில் தற்போது ஈடுபாடு உண்டா?

‘தை’ என்கிற கவிதைகளுக்கென்றே ஓர் இலக்கிய இதழ் நடத்துகிறேன்.


11) கண்ணதாசன் சினிமாவில் பாட்டு எழுதிக் கொண்டே நூல்கள் எழுதினார். வைரமுத்துவும் அதையே பின்பற்றுகிறார். அதேபோல் உங்களுக்கு நூல்கள் எழுதும் எண்ணம் உண்டா? எம் மாதிரியான படைப்பை உருவாக்க உள்ளீர்கள்?

இது வரையில் ஏறக்குறைய 12 நூல்கள் எழுதியிருக்கிறேன். பாரதியாரைப் போல்.. பாவேந்தரைப்போல்.. ஒவ்வொரு நூலும் பாடுபொருளிலும்.. நடை வடிவிலும்.. வெவ்வெறு தன்மையில் விளையவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.


12) தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தை படைக்க என்ன செய்ய வேண்டும்? முடியுமா?

தமிழ் இலக்கியத்தில்.. சங்ககாலப் புலவர்களைப் போல.. இந்தக் கவிஞர் சிறந்த கவிதை என்று சொல்ல முடிந்ததைப் போன்ற.. ஓர் மகிழ்ச்சி தரத்தக்க.. மக்கள் மயப்பட்ட.. அனைத்துத் தரப்பினரும்.. குறிப்பாகத் தலித்திய.. பெண்ணிய.. படைப்பாளிகளும் மிகச்சிறந்த மறுதலிக்கப்படமுடியாத படைப்புகளை வழங்குகிற காலமிது.

உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தைப் படைக்க வேண்டுமானால் தமிழ்த் தரம் வாய்ந்த கருக்களைப் பாடுப்பொருள்களாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.

13) விருதுகள் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையயனில் அதற்கான காரணம்?

விசாரணைகளின் மீதுதான் நம்பிக்கையுள்ளது! பத்தரை ஆண்டுகள்.. கால் கடுக்க.. கால் கடுக்க.. நீதிமன்ற வளாகங்களில் நின்றிருக்கிறேன்… என் இனத்திற்காகவும்.. எம் மொழிக்காகவும்.. எழுதினேன் என்பதற்காகவும்.. பேசினேன் என்பதற்காகவும் இதனை மீறிய விருதை எனக்கு யாரால் கொடுக்க முடியும்?

ஆனாலும்.. முதல் தலைமுறையில்.. எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டு.. எழுத்தாளர்களாகவும் வருகிற தம்பி தங்கையர்கள் அடையாளப்படுவதற்கு இந்த விருதுகள்.. ஓரளவிற்குப் பயன்படுகின்றன. என்பதும் உண்மைதான்.


14) பாடல்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகரித்துள்ளதே?

இரண்டு மூன்று பேர் மட்டுமே வாழ்வதற்கு மிகப்பெரிய மாளிகைகளும்.. இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்வதற்கு ஒரே குடிசையுமாக உள்ள மோசமான சமூகத்தில்.. இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல.. மூன்று.. நான்கு.. அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும்.
ஒவ்வொரு கணவன் மனைவிக்கும்.. தங்கள் காமத்தை.. •தந்திரமாக அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தித்தராதவரை. இத்தகைய கேவலங்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கும்.


15) நிறைய பாடலாசிரியர்களை, இயக்குனர்களை உருவாக்கியிருக்கிறீர்களே… எப்படி?

தன் மார்பில் ஊறிக்கனக்கும் தாய்ப்பாலைத் தன் குழந்தைக்கு மட்டுமே என்று வைத்திருக்கத் தெரியாத தாய்கள் எங்களூர்த் தாய்கள். நானும் ஒரு மார்பில் பால்குடித்து வளர்ந்தவனில்லை.
தாய்ப்பாலையே அடுத்த குழந்தைகளுக்கும் ஊட்டிப் பசியாற்றி மகிழ்கிற அந்தப் புன் செய்க் காட்டு வாழ்வில் பிறந்து வளர்ந்துதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மற்றும்.. என் கவி ஆசான் அப்துல் ரகுமான் அவர்கள்.. தமக்கான விலை மதிக்கப்படமுடியாத இரவுகளை.. வளரும் கவிஞர்களுக்காகத் தந்து உதவிய அனுபவங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

செவ்வாய், டிசம்பர் 09, 2008

வேர் நனைப்போம்!

வேர் நனைப்போம்!

- அறிவுமதி

எதையும் செய்து பிழைக்கலாம்
இழிவைத்
தமிழில்
விதைக்கலாம்
என்றே
துணிந்த
திமிரிலே
எத்தனை
எத்தனைத்
தொலைக்
காட்சி!
எல்லாம்..
எல்லாம்..
அன்னைத் தமிழைக்
கொன்று
முடிக்க
அவாள்கள்
கண்ட
கதிர் வீச்சு!

தமிழர் இல்லா
தொலைக்
காட்சி!
தமிழருக்கான
தொலைக்
காட்சி!

தமிழே
இல்லா
தொலைக்
காட்சி!
தமிழகத்தின்
இழிவாச்சு!
இழிவைத் துடைக்க
உருவச்சு...
எழிலாய்
‘மக்கள்
தொலைக்
காட்சி.!

மருத்துவர் கண்ட
தொலைக்
காட்சி!
தமிழ்
மருத்துவம்
பார்க்கும்
தொலைக்
காட்சி!

மக்கள் நலனே
அதன்
மூச்சு!
மானத்
தமிழே
பயிராச்சு!

முத்தமிழ் வளர்க்கும்
தொலைக்
காட்சி!
மூன்று
ஆண்டுகள்
வயசாச்சு!
தத்தித் தவழும்
வயதினிலும்
தடுமாறாத
செயலாச்சு!

இது
தொடர்ந்து
நடக்க
தோள்
கொடுப்போம்!

இது
படர்ந்து
செழிக்க
வேர்
நனைப்போம்!

வெள்ளி, ஏப்ரல் 11, 2008

அன்புள்ள ஞாநிக்கு…

அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.

அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…

நான்..பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

நன்றி ஞாநி..

எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!

சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008