வெள்ளி, அக்டோபர் 28, 2005

வாழுகிற சுத்தத் தமிழன் அறிவுமதி

தமிழன், தமிழ் மண், தொன்மம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி: பாரதிராஜா புகழாரம்

தமிழின எழுச்சிக் கவிஞர் அறிவுமதி இயக்கிய குறும்படமான நீலம் திரைப்பட பாராட்டு விழா சென்னையில் கொட்டும் மழைக்கிடையில் புதன்கிழமை மாலை 12.10.2005 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் இராசாராம் தலைமை வகித்தார்.
இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: இவன் அறிவுமதி என் நண்பன் என்று சொல்வதா என் சீடன் என்று சொல்வதா?. இந்த உலகில் தனக்குத்தானே அழுது கொண்டு, சிரித்துக்கொண்டு தனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பிறருக்காக வருத்தப்படுவான், தேடுவான், வாழ்வான்...இப்படி பிறருக்காக வாழ்கிறவர்கள் இந்த ஆறரை கோடி தமிழரில் நான் உட்பட எவருக்கும் தகுதி இல்லை. என் அறிவுமதிக்கு மட்டுமே அந்த முழுத் தகுதி உண்டு. அவன் வாங்கிய அடிகளில் சுயத்தன்மையோடு சுயம்புவாக எழுந்து நிற்கிறவன். குழந்தைகால மனதில் அவன் மனதில் தமிழன் என்ற உணர்வும் தொன்ம உணர்வும் எப்படி பதிவானதோ அப்படியே இருக்கிறான் இன்னமும். அவன் சுத்தமான மனிதன். அவனுக்கு பாடல் எழுதத் தோன்றினால்தான் எழுதுவான். இந்த நீலம் படம் கூட அவனுக்குள் இருந்த அரிப்பின் வெளிப்பாடு. பிறரது சோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிற அரிப்பின் வெளிப்பாடு. இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கடல் அலை அடிக்க அடிக்க ஓடி ஓடிச் சென்று நண்டைத் தோண்டி எடுத்து பேசுகிறான்...என் அம்மாவைப் பார்த்தாயா? என்று. அந்தச் சிறுவன் நண்டுக்காகத் தோண்டும் போது இந்த கடலுக்குள்ளே உன்னைப் போல் தான் அவர்களும் என் மக்களும் போனார்கள். நீ மட்டும் உயிரோடு உள்ளாய். என் மக்கள் இல்லையே என்று சொல்வதைப் போல் கவிதையாக்கியிருக்கிறான் அறிவுமதி. என்னிடம் அவன் ஆசானாக பழகியதை விட தாயின் பரிவுடன்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறான். தமிழன், தமிழ் மண், தொன்மம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி. நீலம் குறும்படத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறான். 10 தமிழர்கள் கூடி நின்று சப்தமாகத் தமிழைப் பற்றி பேசுவது கூட இங்கே பிரச்சனையாக்கப்படுகிறது. தங்கர்பச்சான் அமைதியாகப் பேசி இருந்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவனுக்கிருந்த கலைவெறியில் பேசியிருக்கிறான். அந்த 20 நாட்கள் நான் இங்கு இல்லை. இருந்திருந்தால் தங்கரை சட்டையைப் பிடித்து அறைந்திருப்பேன்? எங்கே போய் என்ன செய்து விட்டு வந்தாய் என்று? யாரை எங்கே நிறுத்துகிறார்கள்? உன்னை மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்ச்சி தமிழ்த் திரை உலக வரலாற்றின் கறை. அது அழியவே அழியாது. அழிக்கவும் முடியாது. துடைக்கவும் முடியாது.மதம் என்பது போதை. பஞ்ச பூதங்களைத்தான் அனைவரும் உச்ச சக்தியாக வணங்கி வருகிறார்கள். இந்த நாட்டின் மத்திய அமைச்சர்களாகட்டும், மாநில அமைச்சர்களாகட்டும் அனைவரும் பொதுமனிதர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் ஏன் குடியரசுத் தலைவர் வரை அவர்கள் பதவி வகிக்கும் 5 ஆண்டுகாலத்தில் பொதுமனிதனாக இந்த சமூகத்தால் அவன் தரித்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் அவன் வின்சென்ட்டாக இருந்தாலும், அகமதாக இருந்தாலும், சின்னச்சாமியாக இருந்தாலும் அதை கழற்றிவிட்டு பொதுமனிதனாக வாழ வேண்டும். அதற்கான கட்டாய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு: தம்பி அறிவுமதி நல்ல தமிழ் உணர்வாளன். சத்தியகீர்த்தி. எந்த காலகட்டத்திலும் அவன் சத்யகீர்த்தியாகவே வாழ்கிறான். உள்ளேன் அய்யா என்ற படமெடுப்பதாக சொன்னான். ஆனால் அந்தப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. தனக்காக முதலீடு செய்த அற்புதம் என்ற அற்புதமான மனிதருக்காக இன்னமும் காத்திருக்கிறான். இது குறித்து கேட்டபோது, அண்ணே, இந்தப் படத்துக்கான 6 பாடல்களையும் பதிவு செய்துவிட்டேன். அதை முடித்துவிட்டு உங்களுக்குப் படம் செய்து தருகிறேன் என்றான். தொப்புள்கொடி என்ற படத்தை செய்துதருவதாக சொன்னான். படத்தின் பெயரைப் பதிவு செய்து 2 ஆண்டு காலமாகிவிட்டது. இன்னமும் அவன் செய்து தரவில்லை. சிறைச்சாலை என்ற படத்தை உயிர்பித்த சிற்பி. எதிரியின் நரம்புகளால் கொடியேற்றுவோம் என்று எழுதியவன். 20 கோடி ரூபாயை ஆளவந்தான் படத்தில் முதலீடு செய்து ஒரு தூரோகத்துக்குப் பால் வார்த்தேன். இந்த சத்யகீர்த்திக்கு நீர் ஊற்றிட நீ என்னிடம் விரைந்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத் தொகுப்பாளர் ஜெயம் மோகன்: திரையரங்குகளில் செய்திப் படம் போடுவதைப் போல் சில நிமிடங்கள் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்தக் குறும்படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி குறும்படங்களின் நோக்கம் வெற்றி பெறும்.

இயக்குநர்நடிகர் தங்கர்பச்சான்: உயர்ந்த பண்பாளராக, நினைத்ததைப் பேசக்கூடிய சிறந்த மனிதராக, கலையாளனாக அண்ணன் அறிவுமதி இருக்கிறார். என் தமிழின உணர்வுக்கு உரமாக இருந்தவர். என் பண்புகளை மாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்த சிந்தனைகள் வேறு. தமிழ், தமிழர் என்று இப்போது நான் பேசிவரும் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறவர் அண்ணன் அறிவுமதி. புரஜெக்டர்கள் எனப்படுகிற படம்காட்டும் கருவி மூலம் பல பாவச்செயல்களை செய்து வரும் திரையரங்குகளில் இந்தக் குறும்படங்களும் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தன் பொருளாதர நிலை தாழ்ந்து இருந்தாலும் உணர்வுகளில் தாழ்ந்துபோகாத இந்தக் கலைஞன் அறிவுமதி நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

ஏற்புரையில் இயக்குநர்-கவிஞர் அறிவுமதி: பேராசிரியராக வேலைக்குப் போக வேண்டியவனை கெடுத்தவர் 16 வயதினிலே படம் எடுத்த என் ஆண் தாய். இரும்புச் சுவருக்குள் இருந்த திரை உலகத்தை எங்கிருந்து வந்தாலும் எந்த சேரியிலும் இருந்து வந்தாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எங்கள் கைகளை பற்றியவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். அதனால்தான் பாரதிராஜா, இளையராஜா மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ஆவேசத்தோடு தடுக்கிற முதல் தமிழனாக நேற்று மட்டுமல்லஇன்றும் நாளையும் இருப்பேன். தாமிரபரணி நதிக்கரையில் மீன்கள் கடிக்க கடிக்க என் ஆண்தாய் முதுகில் அழுக்குத் தேய்த்திருக்கிறேன். விடுடா, விடுடா எங்கம்மா நினைவு வருகிறது என்று அவர் சொல்வார்.நான் அவர் முதுகின் அழுக்கு துடைத்தேன். அவர் தமிழ்த் திரை உலகின் அழுக்குகளைத் துடைத்தவர். இன்று அவரையும் பின்தள்ளுகிறார்கள்.ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் அடையாளம் இல்லை. குறும்படங்கள்தான் சமூகப் பணியாற்ற வேண்டும். கிழக்குச் சீமையில் படத்தில் நான் பணிபுரிந்ததைப் பார்த்த சிறைச்சாலை படத்தின் உரையாடல்பாடல் நீதான் எழுத வேண்டும் என்ன சொல்கிறாய் என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு முழுப்படத்துக்கும் என்னை பொறுப்பாக்கியவர். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு இயக்குநராக உருவாக இருந்த என்னை சிறைச்சாலை படம் மூலம் பாடல்களை எழுத வைத்தவர் கலைப்புலி தாணு அண்ணன். ஏ.ஆர். ரகுமானிடம் அழைத்துச் சென்று இவனை பரிந்துரைக்கிறேன் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்காதே.. மெட்டுக்குப் பாட்டெழுதட்டும். மெட்டு கொடு என்று சொன்னார். நான் இதுவரை 120க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். எந்தத் தயாரிப்பாளரிடமும் எந்த இசையமைப்பாளரிடமும் போய் வாய்ப்புக்காக எப்போதும் நான் கேட்டதே இல்லை. தொப்புள்கொடி திரைப்படம் குறித்து அண்ணன் தாணு கூறினார். அது மொரீசியசிலிருந்து தமிழ் அடையாளத்தை தேடி வரும் பெண்ணின் கதை அது. என் ஆசான் பாரதிராஜா, தங்கர்பச்சான், தம்பி சீமான் உள்ளிட்ட பலரது கூட்டு முயற்சியில் அது விரைவில் உருவாக்கப்படும். அதை தாணு அண்ணன் மிக விரைவில் பெற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அறிவுமதி.

இந்த நிகழ்வில் நீலம் குறும்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வில் மதுரா பாலன், இராசாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நீலம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

நன்றி - புதினம்.காம்

அறிவுமதியின நீலம்அண்ணன் அறிவுமதி அற்புதமான மனிதர். எதையும் முழுமையாக செய்ய முயலுபவர். சுனாமி இழப்பை சிறப்பாக பதிவுசெய்யும் நோக்கில் ''நீலம்'' குறும்படம் உருவாக்கினார். அதை பற்றி உண்மை இதழில் வெளியான செய்தி...

2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

“நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.

தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.

தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.
“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா?”
என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை

அறிவுமதி நேர்காணல்

இலட்சியக்கவி அறிவுமதி அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்...

அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?

அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்கு மட்டும் ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.

கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?

என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும் இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.

உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..

முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.

உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள் பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன?

தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...

தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும்.

இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்?

இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது? தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.

நன்றி: துவக்கு