வியாழன், மார்ச் 15, 2012

ஆடல் கண்ணகி


ரங்களின் தோள்கள் மீது
கைகள்
போட்டுக்கொண்டு
ஒரு
மலைக்
கிழத்தி
மகிழ்ந்தாடிக்கொண்டிருந்த
பொழுதில்
தெறித்த
ஒற்றைச்
சலங்கையெடுத்து
ஊன்றினள் ஒருத்தி
உயர்ந்த
நல்
விதை
என


வானம் திகைக்க
வளர்ந்த
மரத்தில்
சலங்கை நெற்றுகள்
சடை
சடையாகக்
காய்த்துத் தொங்கக்
கோயிற்
காட்டின்
அடம்புகள் விலக்கி
வந்த
உடுக்கையின்
பேச்சை
உள்
குடித்த
வெறியில்
அடவுகள் கட்டி
ஆடத்
தொடங்கிய
மரத்துச் சலங்கைகளது
பேரோசை
போய்
கண்ணகியாளைக்
கை
பிடித்து
இழுத்து வந்து
ஆடடி
அம்மே
ஆடு
ஆடு
என்றது
அதிர்ந்தவள் நடுங்கி
ஆடத்
தெரியாதே
என்றாள்
அதிரச் சிரித்த
அத்தனை
சலங்கைகளும்
ஆடத்
தெரியாதாம்
அம்மைக்கு
ஆடத்
தெரியாதாம்
என
உரக்கக் கூவி
உச்சுக்
கொட்டின
கூசிக் குறுகிக் குழந்தையாய்
நின்ற
கண்ணகி
கண்களிலிருந்து
உதிர்ந்தன
கண்ணீர்ப்
பரல்கள்
கண்ணீர்ப்
பரல்கள்
பரல்களின் விசும்பலில்
பட்டென
விழித்த
கொற்றவைக்
கிழவோள்
கூர்ந்து நோக்கி தன்
குழந்தையைத்
தொட்டாள்
கட்டியணைத்துக்
கண்ணீர்
துடைத்தாள்
சலங்கைகள் பறித்துச்
சடுதியில்
கோத்துக்
கண்ணகியாளின்
கால்களில்
கட்டினாள்
ஆடிப்போன அவளோ
ஆடக்
கூடாதே
தாயே
நான்
ஆடக்
கூடாதே
என்று
அழுதாள்
அழுதாள்
அழுதாள்
கோபம் தலைக்கேறிய
கொற்றவையாளோ
குனிந்து
தன்
கால்களிலும்
சலங்கைகள் கட்டிச்
சட்டென
நிமிர்ந்தவள்
செவ்வாடை தூக்கிச்
செருகிக்
கொண்டு
அடவுகள் வியக்க
ஆடத்
தொடங்கினாள்
அடவுகள்
சுழற்றிய
அதீதக் காற்றில்
மரங்கள்
ஆடின
மலைகள்
ஆடின
பறவைகள்
ஆடின
பனைகள்
ஆடின
கண்ட கண்ணகி
கண்களைத்
துடைத்தாள்
முதல்
முறை
மண்ணை
மூர்க்கமாய்
உதைத்தாள்
காடு கிழவோள் காட்டுடன்
ஆடும்
அத்தனை
அத்தனை
அதிர்வையும் அடடா... அடடா...
அள்ளி
விழுங்கி
ஆவேசமுற்று
ஆடத்
தொடங்கினாள்
ஆண்
வலைப்
பின்னல்கள்
அனைத்தும்
கிழியக்
கிழியக்
கிழிய
பெண்
சுமைப்
பாறைகள்
பிளந்து
சரியச்
சரியச்
சரிய
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
கண்ணகி
சலங்கைகள் அனைத்தும்
ஒலிகள்
ஒடுங்கி
உம்மென்றாயின
கொற்றவை அம்மா
கொதித்துப்பேசினாள்...
நடவு நடத் தெரியாத
கைகள்
நடம்
ஆடத்
தெரியாத
கால்கள்
நடமாடத் தகுதியற்றவை
மகளே
நடமாடத்
தகுதியற்றவை
உடலுழைப்பின்
உற்பத்தியே
இசையும்
ஆடலும்
மாட்டின் நெற்றியில்
மாட்டிய
சலங்கைகளே
ஆட்டக்
கால்களின்
அணிகள்
ஆயின
பரத முனிவனா
பறித்துத்
தந்தான்
பகர்பவர் எவரையும்
பார்த்து
நகைப்பேன்
இளங்கோ என்பவர்
யாரெனக்
கேட்கின்
அரசருக்கடுத்த
அடுக்கில்
நிற்பவர்
ஆம் அவர்
வணிகர்
அடியே கண்ணகி
அளவிற்கதிகப்
பொருள்
வளப்
பெருக்கில்
பெண்களைப் பெரிதும்
பெருமை
செய்தலாய்க்
கற்பெனும்
பொய்யைக்
கற்பிதப்
படுத்தலாய்
உழைக்கத் தடுத்து
உட்கார
வைத்து
இசையைக்
கற்றல்
இழுக்கெனச்
சொல்லி
ஆடல்
கற்றல்
ஆகாதெனத்
தள்ளி
மண்மகள் அறியா
பாதக்
காரிகளென்று
மாபெரும்
பொய்யில்
மகளிரை
அமுக்கி
மாந்த இயல்பின்
மரபை
மறித்ததால்
அல்லோ
இசையும் நடமும்
இயல்பாய்த்
தெரிந்த
கோவலப் பையன்
இரண்டும்
இல்லா
உன்னை
விடுத்து
ஆடலும்
பாடலும்
அழகும் என்று இக்
கூறிய
மூன்றிலும்
சிறந்த
மாதவியாளிடம்
மனதைக்
கொடுத்து
உன்னை
முதலில்
உடனே
இழந்துத்
தன்னையும்
முடிவில்
தானே
இழந்து
வரலாற்றுப் பிழையாய்
உன்
வாழ்வைச்
சிதைத்தான்
உடைமைப் பொருளாய்
உள்ளே
தள்ளி
மகளிரின் உரிமைகள்
மறுத்ததால்தாமே
இன வரலாற்றில்
இத்துணை
இழப்புகள்
இத்துணைச்
சரிவுகள்
ஆடலும் பாடலும்
இனத்திற்குத்
தூரமாய்
இருக்கும்
வரையில்
எழுச்சி நெருப்புகள்
எழுப்பவே
முடியா
அடிமைக்
குணங்களை
அகற்றவே
முடியா
அதனை உணர்ந்தே
அம்மா சொல்கிறேன்...
ஆடடி
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
அம்மா கொற்றவை
ஆணையும்
சமமாய்
ஆண்ட
தலைமையள்
பாடலும்
ஆடலும்
பழுத்தச்
செழுமையள்
அவ்வழிதானடி
அழுத்திச்
சொல்கிறேன்
தொடங்கடி
கண்ணகி
துணங்கை
குரவை
துடியலி பறையலி
தூய
நல்
குழலொலி
துயிலா
முழவொலி
இனிதாம்
யாழொலி
அனைத்தையும்
விழுங்கி
ஆடடி
மகளே
அருமைக்
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடடி யம்மே
ஆடு
ஆடு
ஆடு!

அறிவுமதி குரலில்  : http://www.youtube.com/watch?v=qDWMxNLuP8o&feature=share

ஓவியங்கள் : ம.செ  
நன்றி விகடன்











7 கருத்துகள்:

கார்த்திகேயன் சொன்னது…

அருமை..அருமை பகிர்வுக்கு நன்றி எழில் :)

கார்த்திகேயன் சொன்னது…

அருமை அருமை...பகிர்வுக்கு நன்றி எழில்.
படிக்கப் படிக்க உணர்வுகளை சுண்டி இழுத்து,எனை விசித்திர ஓவியமாக்குகிறது கவிதை,அய்யாவின் குரலை கேட்க கேட்க தேசிய கீதமாய் என் மயிற்கூச்செறிந்து எழுந்து நின்று மரியாதை செய்கிறது.இந்த ஏணியின் ஒவ்வொரு படியும் என் சிந்தனையை உயர்த்துகிறது.இன்னும் உயர உயர ...

தமிழ்த்தினேஷ்... சொன்னது…

ஆனந்த விகடனில் படித்தேன்..
அருமையாக இருந்தது..
நன்றி..

ஆண்டோ பீட்டர் சொன்னது…

கண்கலங்க வைக்கும் பேச்சு. உங்கள் படைப்பிற்கு என் நன்றி....

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/may/260512.asp

Srinivasan சொன்னது…

உங்கள் படைப்பிற்கு நன்றி. கண்கலங்க வைக்கும் பின்னணி இசையுடன் உங்கள் பேச்சு மிகவும் அருமை இதை அனைவரிடமும் கொண்டு செல்ல என் வாழ்த்துக்கள்

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/may/260512.asp

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

உங்களோடு... சொன்னது…

//உடைமைப் பொருளாய்
உள்ளே
தள்ளி
மகளிரின் உரிமைகள்
மறுத்ததால்தாமே
இன வரலாற்றில்
இத்துணை
இழப்புகள்//...unmai.