சனி, ஜனவரி 07, 2006

நட்புக்காலம்

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் -

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?

***

கவிதை தேர்வு: நண்பன்

கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்

***

கவிதை தேர்வு - நண்பன்.

இரண்டு ஊதுபத்தி - புகையின் அசைவில் நீ - நான்.

எத்தனை அலாதியான கற்பனை. கற்பனை தானா? ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா? அசைந்து அசைந்து கிளம்பும் புகையின் மௌனங்களுக்கிடையே ஊதுபத்தியாய் கரைந்து கொண்டிருக்கும் நீயும் நானும்... நம்மிடமிருந்து கிளம்பும் அந்த புகை மண்டலம் ஒன்றுடன் ஒன்று கலந்து யாரிடமிருந்து, எந்த இடத்திலிருந்து, எந்தப் புகை என்று பிரிக்க இயலாத கலவையாய் ஆகிப் போன நீயும் நானும் - என்று வரும் இந்த கலக்கும் நாள்?

ஏக்கமாக இருக்கிறது...

ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்