வெள்ளி, நவம்பர் 11, 2005

சாரல் மழை

அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!

'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக.

இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்

''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.

காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.

அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.

காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. 'காதலுக்கு தினம் ஏது தினமும்' என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.

'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்நாம் அன்பே!அன்பே!

தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?

அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!

ராசாத்தி
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!

ஊனே.. ஊனே... உருக்குறானே...
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...
கண்ணால் என்னைக் குடிக்கிறானே...
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...

மறப்பதென்றால் அது முடியவில்லை.
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.

பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!

காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!

மாலை என்வேதனை கூட்டுதடி!
காதல் தன்வேலையைக் காட்டுதடி!

அறிவுமதி

நன்றி: ஆனந்தவிகடன்

1 கருத்து:

Unknown சொன்னது…

அறிவுமதியின் மழைச் சாரலில் நானும் நனைந்தேன்...

சாரலை எனக்கு உணர்த்திய தம்பிகளுக்கு நன்றி...

சாரல் மழை: தலைப்பு யோசிக்க வைக்கிறது..?

அவரின் கவிதை மழையின் சாரலா இவ் வலைப் பக்கம்?